பேனர் விவகாரம்…. அலகாபாத் நீதிமன்ற தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யோகி ஆதித்யநாத் அரசு மேல்முறையீடு…

 

பேனர் விவகாரம்…. அலகாபாத் நீதிமன்ற தீர்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் யோகி ஆதித்யநாத் அரசு மேல்முறையீடு…

உத்தர பிரதேசம் லக்னோவில் வைக்கப்பட்ட, பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளின் பெயர், போட்டோ உள்ளிட்டவை இடம் பெற்ற பேனர்களை அகற்றுமாறு உத்தரவிட்ட அலகாபாத் உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அம்மாநில அரசு மேல்முறையீடு செய்துள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் லக்னோவில் கடந்த டிசம்பர் 19ம் தேதியன்று நடைபெற்ற  குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்தில் கலவரகாரர்கள் பொது சொத்துக்களுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி இருந்தனர். இதனையடுத்து பொது சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்களிடம் அதற்கான இழப்பீடு பெறப்படும். இல்லையென்றால் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை செய்து இருந்தார். இந்நிலையில் கடந்த வாரம் சி.ஏ.ஏ. எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறையில் ஈடுபட்டு பொது சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த குற்றவாளிகளின் படம், பெயர் மற்றும் முகவரி உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய பேனர்களை லக்னோவின் பல்வேறு முக்கிய சாலைகளில் வைத்தது. 

யோகி ஆதித்யநாத்

மேலும் அந்த பேனரில் பொது சொத்துகளுக்கு சேதம் ஏற்படுத்தியதற்கு இவர்கள்தான் இழப்பீடு வழங்க வேண்டும் இல்லையெனில் அவர்களது சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் என அதில் குறிப்பிடபட்டு இருந்தது. இதனை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த அலகாபாத் உயர் நீதிமன்றம், பேனர்களை அகற்ற உத்தர பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால் உத்தர பிரதேச அரசு இதுவரை அகற்றவில்லை. மேலும், அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நேற்று உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

உச்ச நீதிமன்றம்

இந்த தகவலை உத்தர பிரதேச அட்வகேட் ஜெனரல் ராகவேந்திரா சிங் உறுதி செய்தார். மேலும் அவர் கூறுகையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளோம். உயர் நீதிமன்றத்தில் பேசிய அதே காரணங்களைத்தான் உச்ச நீதிமன்றத்திலும் முன் வைக்க உள்ளோம். சட்டப்பிரிவு 21ன்படி தனியுரிமைக்கான உரிமை தொடர்பாக கூடுதலாக ஒரு விஷயத்தை முன்வைக்க உள்ளோம். இந்த நபர்கள் (பேனர்களில் இடம் பெற்றுள்ளவர்கள்) அனைவரின் விவரங்களும் ஏற்கனவே அச்சு மற்றும் மின்னனு ஊடகங்கள் மூலம் ஏற்கனவே பொது களத்தில் உள்ளன. எனவே தனியுரிமையை மீறுவது குறித்து எந்த கேள்வியும் இல்லை என்பது எங்களது வாதம் என தெரிவித்தார்.