பெயிலான பள்ளி குழந்தைகள் போல் மோடிஜி பொய் சொல்கிறார்! பிரியங்கா காந்தி கிண்டல்

 

பெயிலான பள்ளி குழந்தைகள் போல் மோடிஜி பொய் சொல்கிறார்! பிரியங்கா காந்தி கிண்டல்

பெயிலான பள்ளி குழந்தைகள் போல் மோடிஜி பொய் சொல்கிறார் என காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் பிரியங்கா காந்தி கிண்டல் செய்துள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் பா.ஜ.க. அரசின் பதவிக் காலம் 2020 ஜனவரி 5ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனையடுத்து அம்மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தலை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொள்ள தொடங்கியது. கடந்த நவம்பர் 1ம் தேதியன்று தேர்தல் ஆணையம், ஜார்க்கண்ட் மாநிலத்தின் 81 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான தேர்தல் 2019 நவம்பர் 30ம் தேதி தொடங்கி மொத்தம் 5 கட்டங்களாக நடைபெறும் என அறிவித்தது.

மோடி

இதனையடுத்து இதுவரை ஜார்க்கண்டில் 4 கட்ட தேர்தல்கள் முடிவடைந்து விட்டது. நாளை எஞ்சியுள்ள 15 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டன. காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் நேற்று அங்கு தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பிரியங்கா காந்தி பேசுகையில், தேசிய குடிமக்கள் பதிவேடு அசாமில் தோல்வி கண்டது. அதேவேளையில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பள்ளியில் பெயிலான மாணவன் போல் மோடிஜி பொய் சொல்லி வருகிறார்.

ஜாமியா பல்கலை மாணவர்கள் போராட்டம்

நாட்டில் மாணவர்கள் சாலைக்கு வந்துள்ளனர் மற்றும் அவர்கள் போலீசாரின் தடியடியை எதிர்கொள்கின்றனர். டெல்லியில் மாணவர்கள் தங்களது குரல்களை எழுப்பியபோது, அவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். எனவே இந்த மாநிலத்தில் மாணவர்களின் குரல்களை கேட்கும், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யும், பெண்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் மற்றும் உங்களது கலாச்சாரம் மற்றும் பாரம்பரியத்தை பாதுகாக்கும் அரசை தேர்ந்தெடுங்கள் என வேண்டுகோள் விடுத்தார்