பெட்ரோல், டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்க வாய்ப்பில்லை – மத்திய அரசு தகவல்

 

பெட்ரோல், டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்க வாய்ப்பில்லை – மத்திய அரசு தகவல்

பெட்ரோல், டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

நம் நாட்டின் கச்சா எண்ணெய் தேவையில் 80 சதவீதம் இறக்குமதி வாயிலாகத்தான் பூர்த்தி செய்யப்படுகிறது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் நிலவரத்துக்கு ஏற்ப நாள்தோறும்  பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. கடந்த ஒரு ஆண்டில் மட்டும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை 10 சதவீதத்துக்கு மேல் அதிகரித்துள்ளது. 2019 ஜனவரி 8ம் தேதி ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.50க்கு விற்பனையானது. கடந்த 8ம் தேதி ரூ.75.70க்கு 1 லிட்டர் பெட்ரோல் விற்பனையாது. இதேகாலத்தில், ஒரு லிட்டர் டீசலின் விலை ரூ.62.20-லிருந்து ரூ.68.80ஆக உயர்ந்துள்ளது. 

கச்சா எண்ணெய் விலை நிலவரம்

இந்நிலையில், அமெரிக்கா, ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையத்தில் ஏவுகணை தாக்குதல் நடத்தி ஈரானின் முக்கிய தளபதியாக விளங்கிய காசிம் சுலைமானியை கொன்றது. இந்த செய்தி வெளியானவுடன் சர்வதேச சந்தையில் பெட்ரோலிய கச்சா எண்ணெய் விலை விறுவிறுவென ஏற்றம் கண்டது. இதற்கு பதிலடியாக, ஈரான் அமெரிக்க படைகளை குறிவைத்து ஈராக்கில் தாக்குதல் நடத்தியது. இதனால் இருநாடுகளுக்கு இடையே போர் மேகம் சூழ்ந்தது. மேலும், எண்ணெய் வளம் மிகுந்த வளைகுடா நாடுகளில் பதற்றம் ஏற்பட்டது.   சப்ளை பாதிக்கும் என்ற அச்சத்தில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர தொடங்கியது.

தர்மேந்திர பிரதான்

சர்வதேச சந்தையில் விலை உயர்ந்தால் நம் நாட்டிலும் பெட்ரோல், டீசல் விலை உயரும். கடந்த சில தினங்களாக அவற்றின் விலை உயர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், ஈரான்-அமெரிக்கா இடையிலான பதற்றம் காரணமாக ஏற்படும் தாக்கத்தை (கச்சா எண்ணெய் விலை உயர்வு) குறைக்க மத்திய அரசு பெட்ரோல், டீசல் மீதான வரியை குறைக்குமா என்ற கேள்வி எழுந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் மீதான வரியை உடனடியாக குறைக்க வாய்ப்பில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், புவி அரசியல் பதற்றத்தை மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது. அதேவேளையில், நெருக்கடியிலிருந்து எழும் எந்தவொரு நிகழ்வையும் எதிர்கொள்ள தன்னை தயார்படுத்துகிறது என தெரிவித்தார்.