புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை – சிஆர்பிஎப் வீரர்கள் அதிரடி

 

புல்வாமா தாக்குதல் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை – சிஆர்பிஎப் வீரர்கள் அதிரடி

புல்வாமா தாக்குதலுக்குக் காரணமான ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத் தீவிரவாதிகள் 3 பேர் சுட்டுக்கொலை…!

புல்வாமா தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்ட ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தைச் சேர்ந்த 3 தீவிரவாதிகளை காஷ்மீரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் சிஆர்பிஎப் வீரர்கள் சுட்டுக் கொன்றதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதல் 

கடந்த பிப்ரவரி மாதம் 14 -ஆம் நாள், 78 பேருந்துகளில் சுமார் 2547  சிஆர்பிஎப் வீரர்கள் ஸ்ரீநகரில் இருந்து, ஸ்ரீநகர் ஜம்மு நெடுஞ்சாலை வழியாக ஜம்மு காஷ்மீருக்குச் சென்று கொண்டிருந்தனர். இந்திய நேரப்படி சுமார் 15:15 மணியளவில் லெத்திபோரா மற்றும் அவந்திபோரா பகுதிகளுக்கருகே சிற்றுந்தொன்று படையினரின் பேருந்து ஒன்றில் மோதி வெடித்துச் சிதறியது. இந்தச் சிற்றுந்தில் சுமார் 350 கிலோ எடை கொண்ட வெடிபொருட்கள் இருந்ததாகவும், அதனை அதில் அகமது தார் என்பவர் ஓட்டி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. இதில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டனர். 30-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளையும், சர்ச்சைகளையும் ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்கு ஜெய்ஷ்-இ-முகம்மது என்ற தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுக் கொண்டது.

இந்தியா பதிலடி 

இந்தத் தாக்குதல்  சம்பவத்திற்கு இந்தியா கடும் கண்டனங்களைப் பதிவு செய்தது. பாகிஸ்தானில் இருந்த இந்தியத் தூதரை நாடு திரும்ப உத்தரவிட்டது. மேலும், இந்தியா, பாகிஸ்தானிற்கு அளித்திருந்த வர்த்தக ரீதியான நட்பு நாடு என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றது.

அது மட்டுமில்லாமல், பிப்ரவரி 26 – ஆம் தேதி, ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் அமைந்திருக்கும் பாலகோட் பகுதியில் செயல்பட்டு வந்த ஜெய்ஷ்-இ-முகம்மது தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை வெடிகுண்டுத் தாக்குதல் நிகழ்த்தியது.

காஷ்மீரில் துப்பாக்கிச் சண்டை 

 இந்நிலையில், காஷ்மீர் மாநிலம் ட்ரோல் பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு ராணுவம், மத்திய ரிசர்வ் போலீஸ் படை மற்றும் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது மறைந்திருந்த தீவிரவாதிகள், பாதுகாப்பு படையினர் மீது தாக்குதல் நடத்தினர். பதில் தாக்குதலில் தீவிரவாதிகள் 3 பேர் கொல்லப்பட்டனர். 

பலியான தீவிரவாதிகள் ஜெய்ஷ்-இ-முகம்மது இயக்கத்தை சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. கொலை செய்யப்பட்ட தீவிரவாதிகள் வசமிருந்த துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை பாதுகாப்பு படை வீரர்கள் பறிமுதல் செய்துள்ளனர். தொடர்ந்து, அங்கு தீவிரத் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.