பும்ரா, சாஹல், ரோஹித் கைவண்ணம்; கோலி கையில் வெற்றிக்கிண்ணம்!

 

பும்ரா, சாஹல், ரோஹித் கைவண்ணம்; கோலி கையில் வெற்றிக்கிண்ணம்!

ரொம்ப நேரமாக சவசவ என இழுத்துக்கொண்டிருந்த வெற்றியை பாண்ட்யா தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்து நெருக்கித்தள்ள, இறுதியில் இந்திய அணி 48ஆவது ஓவரில் 4 விக்கெட் மட்டும் இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 122 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார்.

உலககோப்பையின் முதல் இரண்டு ஆட்டங்களில் தோல்விகண்டு, அடுத்த ஆறு ஆட்டங்களிலும் தொடர்ச்சியாக வென்றாகவேண்டிய கட்டாயத்தில்  தனது மூன்றாவது ஆட்டத்தில் இந்திய அணியை எதிர்கொண்டது தென்னாப்ரிக்கா.  ஸ்டெயின் உலககோப்பையில் இருந்து வெளியேறிய செய்தி உடுக்கை இழந்தவன் கைபோல ஆனது தென்னாப்பிரிக்க அணிக்கு. இருந்தாலும் ரபடாவை வைத்து சமாளிக்கலாம் என எண்ணி டாஸ் வென்று பேட்டிங்கை ஆரம்பித்தனர்.

India restrics SA to 227

பும்ராவின் புலிபாய்ச்சலில் துவக்க ஆட்டக்காரர்கள் இருவரும் சரண்டராக, ஆறாவது ஓவரில் இரண்டு விக்கெட் இழப்புக்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. அதன்பின் சாஹல் குல்தீப் யாதவ் சுழலில், அடுத்தடுத்து 5 விக்கெட்களை இழந்த தென்னாபிரிக்கா, 7 விக்கெட்களை இழந்து 158 ரன்கள் எடுத்திருந்தது. விரைவில் சுருட்டிவிடலாம் என்ற நினைப்பில் இருந்த இந்திய அணியினர் கனவில் மோரிஸ் மண் அள்ளிப்போட்டார். அவரும் ரபடாவும் சேர்ந்து எட்டாவது விக்கெட்டுக்கு 66 ரன்களை துரிதமாக சேர்க்க, இறுதியில் தென்னாப்பிரிக்க அணி 50 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 227 ரன்கள் எடுத்தது. புவனேஷ்குமாரும் பும்ராவும் சிக்கனமாக பந்துவீசி தலா இரண்டு விக்கெட்களையும், சாஹல் 4 விக்கெட்டையும் வீழ்த்த, குல்தீப்புக்கு ஒரு விக்கெட் கிடைத்தது.

Rohit Scored Century

சுலபமான இலக்காக தெரிந்தாலும், 228 என்பது தென்னாப்பிரிக்க பந்துவீச்சுக்கு எதிராக சவாலான ஸ்கோர் என்பதால், துவக்க ஆட்டக்காரர்கள் ரோஹித் சர்மாவும் தவானும் மெதுவாக ஆடத்துவங்கினர். ரபடா பந்துவீச்சில் 8 ரன்களுக்கு தவான் ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய கோலி இன்னும் மெதுவாக ஆட, சூப்பரான கேட்ச்மூலம் அவரை வெளியேற்றினார் விக்கெட் கீப்பர் டீ காக். தொடர்ந்து களமிறங்கிய ராகுலும் ரோஹித் சர்மாவும் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். ராகுல் தன் கணக்குக்கு 26 ரன்களை சேர்த்து வெளியேறினார். மூன்று விக்கெட்கள் இழப்பிற்கு 138 ரன்களை எடுத்திருந்த இந்திய அணியை, ரோஹித் சர்மாவும் தோனியும் இணைந்து 74 ரன்கள் எடுத்து வெற்றி கோட்டிற்கு கைபிடித்து அழைத்துச் சென்றனர். ஆயினும் வெற்றிபெற 15 ரன்களே இருந்தபோது தோனி 34 ரன்களில் ஆட்டமிழந்தார். ரொம்ப நேரமாக சவசவ என இழுத்துக்கொண்டிருந்த வெற்றியை பாண்ட்யா தொடர்ச்சியாக இரண்டு பவுண்டரி அடித்து நெருக்கித்தள்ள, இறுதியில் இந்திய அணி 48ஆவது ஓவரில் 4 விக்கெட் மட்டும் இழந்து 230 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ரோஹித் சர்மா 122 ரன்கள் எடுத்து இறுதிவரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார்.