புதிய யூனியன் பிரதேசங்கள் உதயம்! நேற்று வரை 29 ஆனால் இன்று முதல் மாநிலங்களின் எண்ணிக்கை 28 தான்!

 

புதிய யூனியன் பிரதேசங்கள் உதயம்! நேற்று வரை 29 ஆனால் இன்று முதல் மாநிலங்களின் எண்ணிக்கை 28 தான்!

இன்று முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலம் இரண்டு யூனியன் பிரதேசங்களாக உதயமானதால், நம் நாட்டின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28ஆக குறைந்தது. அதேசமயம் யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக உயர்ந்தது.

காஷ்மீர் மாநிலத்துக்கு கொடுக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து நீக்க வேண்டும் மற்ற மாநிலங்களை போன்று அந்த மாநிலமும் நம் நாட்டின் ஒருங்கிணைந்த பகுதியாக இருக்க வேண்டும் என சுமார் 70 ஆண்டுகளாக பெரிய போராட்டமே நடந்து வந்தது. பிரதமர் நரேந்திர மோடி தொடர்ந்து 2வது முறையாக பிரதமராக பொறுப்பேற்ற பிறகு அதற்கான வேலைகளை செய்ய தொடங்கினார்.

மோடி

கடந்த ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி காஷ்மீர் மாநிலத்துக்கான சிறப்பு அந்தஸ்தை மத்திய அரசு நீக்கியது. இதனையடுத்து காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் தாக்கல் செய்து நிறைவேற்றப்பட்டது. புதிய யூனியன் பிரதேசங்கள் சர்தார் வல்லபாய் பிறந்தநாளான அக்டோபர் 31ம் (இன்று) முதல் அதிகாரப்பூர்வமாக செயல்பாட்டுக்கு வரும் என அறிவிக்கப்பட்டது.

இந்தியாவின் புதிய வரைபடம்

அதன்படி, இன்று முதல் ஜம்மு அண்டு காஷ்மீர் மாநிலம் மறைந்து ஜம்மு அண்டு காஷ்மீர் மற்றும் லடாக் என 2 யூனியன் பிரதேசங்களாக உதயமாகியது. இதனையடுத்து நம் நாட்டின் மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 29லிருந்து 28 ஆக குறைந்தது. அதேசமயம் இன்று புதிதாக 2 யூனியன் பிரதேசங்கள் உதயமானதால் மொத்த யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 7லிருந்து 9ஆக உயர்ந்தது. இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு மாநிலம் 2 யூனியன் பிரதேசங்களாக உருமாறியுள்ளது. இதற்கு முன் வரை ஒரு யூனியன் பிரதேசம் மாநிலமாகவும், ஒரு மாநிலம் 2 மாநிலங்களாகவும் மாறிய சம்பவங்கள் நடந்துள்ளது.