புதிய தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை: அண்ணா பல்கலை.,அறிவிப்பு

 

புதிய தேர்வு சீர்திருத்தங்கள் குறித்து ஆலோசனை: அண்ணா பல்கலை.,அறிவிப்பு

தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

சென்னை: தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட 500-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 2017-18 ஆம் கல்வியாண்டு முதல் புதிய தேர்வு விதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அதன்படி முதல் பருவத் தேர்வில் ஏதேனும் ஒரு பாடத்தில் ஒரு மாணவர் தோல்வியடைந்தால், அந்த பாடத்திற்கான தேர்வை அவர் மூன்றாவது பருவத்தில் மட்டும் தான் எழுத முடியும். அதேபோல், எந்த பருவத் தேர்வில் ஒரு மாணவர் தோல்வியடைந்தாலும், அதற்கு அடுத்த பருவத்தில் அப்பாடத் தேர்வை அவரால் எழுத முடியாது. மாறாக ஓராண்டு கழித்து வரும் பருவத்தில் தான் அவர் தேர்வெழுத முடியும்.

உதாரணமாக நான்காம் ஆண்டின் முதல் பருவத்தில், அதாவது ஏழாவது பருவத்தில், ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர் எட்டாவது பருவத்தில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டால் அவர் வரையறுக்கப் பட்ட 4 ஆண்டுகளில் படிப்பை முடித்து பட்டம் பெறுவார். ஆனால், புதிய விதிகளின்படி ஏழாவது பருவத்தில் தோல்வியடைந்த மாணவர், எட்டாவது பருவத்தில் தேர்வு எழுத முடியாது. மாறாக ஒன்பதாவது பருவத்தில் தான் தேர்வெழுத முடியும். அதுமட்டுமின்றி, ஒரு பருவத்தில் அதற்குரிய தாள்களுடன், கடந்த காலத்தில் தோல்வியடைந்த  தாள்களில் அதிகபட்சமாக 3 தாள்களை மட்டும் தான் கூடுதலாக எழுத முடியும்.

இதற்கு மாணவர்கள், கல்வியாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்த தேர்வு சீர்திருந்தங்களை ரத்து செய்ய வலியுறுத்தி கடந்த வெள்ளிக்கிழமையன்று மாணவர்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதுதொடர்பாக தொடரப்பட்ட வழக்கில், உயர்கல்வித்துறை செயலாளர், அண்ணா பல்கலைக்கழகம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த வழக்கானது பிப்ரவரி 28-ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளது.

இந்நிலையில், தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசித்து வருவதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அன்ன பல்கலைக்கழக பதிவாளர் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், அண்ணா பல்கலைக்கழக மாணவர்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். மாணவர்களின் எண்ணம் போராடுவதில் இருக்கக் கூடாது. தேர்ச்சி பெறாத பாடங்களுக்கான தேர்வு முறையில் மாற்றம் கொண்டு வருவது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது என கூறப்பட்டுள்ளது.

முன்னதாக, அண்ணா பல்கலைக்கழக புதிய தேர்வு சீர்திருத்தங்களை ரத்து செய்ய முடியாது. பொறியியல் கல்லூரி மாணவர்களின் கோரிக்கையை ஏற்க முடியாது என துணைவேந்தர் சூரப்பா தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.