பீகாரில் படகு கவிழ்ந்ததால் வெள்ள நீரில் விழுந்த பா.ஜ. எம்.பி.! போராடி காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்

 

பீகாரில் படகு கவிழ்ந்ததால் வெள்ள நீரில் விழுந்த பா.ஜ. எம்.பி.! போராடி காப்பாற்றிய உள்ளூர்வாசிகள்

பீகாரில் வெள்ளம் பாதித்த பகுதிகளை பார்வையிட சென்ற பா.ஜ. எம்.பி. ராம் கிருபால் யாதவ் படகு கவிழ்ந்ததால் வெள்ள நீரில் விழுந்தார். உள்ளூர்வாசிகள் அவரை உடனடியாக காப்பாற்றினர்.

பீகாரில் கடந்த சில நாட்களாக பயங்கர மழை பெய்து வருகிறது. இயற்கையின் கோரதாண்டவத்தால் அங்கு பல மாவட்டங்கள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது. கனமழைக்கு இதுவரை பீகாரில் 42 பேர் பலியாகி உள்ளனர். லட்சக்கணக்கான மக்கள் இருளிலும், போதிய அடிப்படை வசதிகள் இல்லாமலும் தவித்து வருகின்றனர். மீட்பு குழுவினர் ஆபத்தான நிலையில் இருப்பவர்களை மீட்டு வருகின்றனர். 

ராம் கிருபால் யாதவ்

கடந்த மாதம் 30ம் தேதி பீகார் துணை முதல்வர் சுஷில் குமார் மோடியின் வீட்டுக்குள் புகுந்து விட்டது. இதனால் அவரது குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் தவித்து வந்தனர். அவர்களை மீட்பு படையினர் மீட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் நேற்று பாட்னா மாவட்டம் மசூர்ஹி தொகுதியில் வெள்ளபாதிப்புகளை பா.ஜ. எம்.பி. ராம் கிருபால் யாதவ் பார்வையிட்டார். தற்காலிக படகு சென்றில் அவர் வெள்ளப்பாதிப்புகளை பார்வையிட்டார். ராம்னிபிகா கிராம பகுதிகளில் வெள்ளபாதிப்புகளை அவர் பார்வையிட சென்றபோது எதிர்பாராதவிதமாக படகு கவிழ்ந்தது. இதனையடுத்து ராம் கிருபால் யாதவ் வெள்ள நீருக்குள் விழுந்தார். அவரை அந்த பகுதிவாசிகள் உடனடியாக மீட்டனர்.

ராம் கிருபால் யாதவ்

இது குறித்து ராம் கிருபால் யாதவ் கூறுகையில், வெள்ளபாதிப்புகளை பார்வையிட சரியான படகு கிடைக்கவில்லை. அரசு நிர்வாகம் பாட்னாவில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறது. அவர்கள் கிராமப்புறங்களை கண்டு கொள்ளவில்லை. மக்கள் எல்லாம் கண்ணீர் வடிக்கிறார்கள். உணவு கிடைக்காமல் கால்நடைகள் இறந்து வருகிறது என தெரிவித்தார்.