பி.எஸ்.என்.எல். பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ரூ.74 ஆயிரம் கோடியுடன் வருகிறது மத்திய அரசு!

 

பி.எஸ்.என்.எல். பணியாளர்களுக்கு ஹேப்பி நியூஸ்! ரூ.74 ஆயிரம் கோடியுடன் வருகிறது மத்திய அரசு!

நஷ்டத்தை ஏற்படுத்தி வரும் பொதுத்துறை தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களான பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். ஆகிய நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்கு ரூ.74 ஆயிரம் கோடி பிளானை மத்திய அரசு முன்வைத்துள்ளது.

தொலைத்தொடர்பு துறையில் கொடி கட்டி பறந்த பொதுத்துறையை சேர்ந்த பி.எஸ்.என்.எல். நிறுவனமும், மற்றொரு அரசு நிறுவனமான எம்.டி.என்.எல்.-ம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக கடும் பின்னடவை சந்தித்து வருகின்றன. மோசமான நிர்வாகம், பணியாளர் செலவினம் அதிகம், தவறாக வழிநடத்துதல் மற்றும் அடிக்கடி மத்திய அரசின் தேவையில்லாத குறுக்கீடு, தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதில் தாமதம் போன்ற காரணங்களால் அந்த 2 நிறுவனங்களும் வருவாய் ஈட்டவே திணறி வருகின்றன.

பணம்

பொதுத்துறை நிறுவனங்களில் அதிக நஷ்டத்தில் இயங்கும் நிறுவனமாக உள்ளது. கடந்த நிதி ஆண்டில் பி.எஸ்.என்.எல். நிறுவனம் ரூ.13,804 கோடி நஷ்டத்தை சந்தித்தது. எம்.டி.என்.எல். நிறுவனம் இந்த பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ரூ.3,398 கோடி நஷ்ட கணக்கை காட்டியது. இந்நிலையில், பி.எஸ்.என்.எல். நிறுவனத்தின் நிலை மிகவும் மோசமான கட்டத்தை நெருங்கி விட்டது. கடந்த மாத சம்பளத்தை கொடுக்கவே அதனிடம் பணம் இல்லை. இதனால் நிறுவனத்தை தொடர்ந்து நடத்த நிதி உதவி அளிக்கும்படி மத்திய அரசு அந்நிறுவனம் கோரிக்கை விடுத்தது.

இதற்கு மேலும் இப்படியே விட்டால் பி.எஸ்.என்.எல். மற்றும் எம்.டி.என்.எல். நிறுவனங்கள் பெரிய சிக்கலில் கொண்டு போய் விட்டு விடும் என்பதை உணர்ந்த மத்திய அரசு தற்போது புதிய பிளானை செயல்படுத்த முடிவு செய்தது. இந்த 2 நிறுவனங்களுக்கு புத்துயிர் கொடுக்க ரூ.74 ஆயிரம் கோடி திட்டத்தை முன்வைத்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சரவையின் வரைவு அறிக்கை ஒன்றை தயார் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அதில், அரசு நிறுவனங்கள் 4ஜி சேவையை செயல்படுத்தும் வகையில் அலைகற்றைக்காக ரூ.20 ஆயிரம் கோடி ஒதுக்கப்படும். அடுத்து மூலதன செலவினங்களுக்காக ரூ.13 ஆயிரம் கோடி வழங்கப்படும்.

எம்.டி.என்.எல்.

மேலும், பணியாளர் செலவினத்தை குறைக்க கவர்ச்சிகரமான வி.ஆர்.எஸ். மற்றும் முன்கூட்டிய ஓய்வுதிய ஆதாயங்கள் வழங்கி பணியாளர்களை வீட்டுக்கு அனுப்ப முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.40 ஆயிரம் கோடி செலவு செய்ய மத்திய அரசு தயாராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.