பிள்ளையாரை வணங்கும் போது ஏன் தலையில் குட்டிக் கொள்கிறோம்…? காவிரியை உருவாக்கிய கணபதி!

 

பிள்ளையாரை வணங்கும் போது ஏன் தலையில் குட்டிக் கொள்கிறோம்…? காவிரியை உருவாக்கிய கணபதி!

சிவனை வேண்டிய அகத்தியருக்கு தன் தலையிருந்து செல்லும் கங்கையின் ஒரு பகுதியை அகத்தியருக்கு கொடுத்தார்.

கர்நாடகாவிற்கு மட்டுமல்லாமல் தமிழகத்திலும் பல மாவட்டங்களுக்கு வாழ்வாதாரமாக திகழ்கிறது காவிரி ஆறு. இந்த காவிரியைக் கரைபுரண்டு ஓட வழிவகை செய்தவர் வினைகளைத் தீர்க்கும் விநாயகர் என புராணக் கதைகள் கூறுகின்றன. ஒரு முறை சுர்வதமன் என்ற அரக்கன் தன்னுடைய கடுமையான தவத்தினால் சிவபெருமானை மகிழ்வித்தான். அதன் மூலம் தான் என்றும் வெற்றி அடைய வேண்டும் என்ற வரத்தைப் பெற்றான்.  வரம் பெற்ற பின்னர் தன் கட்டுப்பாட்டுக்குள் உலகை கொண்டு வர வேண்டும் என ஆட்டி படைத்தான். தேவலோகத்திற்குச் சென்று அனைத்து தேவர்களையும் பிடித்து தன் சிறையில் அடைத்தான். ஆனால் சுர்வதமனிடம் சிக்காமல் இந்திரனும், வருணனும் தப்பிச் சென்று விட்டனர். இந்திரனை சிறைபிடித்தே ஆக வேண்டும் என வேட்கை கொண்டிருந்த சுர்வதமன், வானில் பறந்து கொண்டிருந்த போது வருண பகவானைப் பிடித்தார். உன்னையும் சிறையில் அடைக்காமல் இருக்க வேண்டுமெனில், தென் இந்தியாவில் ஒரு சொட்டு மழை கூட பொழியக் கூடாது. அப்படி செய்தால் தென் இந்தியாவில் இந்திரனுக்கு அடைக்கலம் கொடுத்த மக்கள் இந்திரனை என்னிடம் ஒப்படைப்பார்கள் என கட்டளை விதித்தார். 

vinayakar

அதை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்ட வருண பகவான் தென்பகுதிகளில் மழை பொழிவதை நிறுத்தினார். இதனால் நீரின்றி தென்பகுதி பாலைவனமானது. தமிழைச் சிறப்பித்துக் கொண்டிருந்த அகத்தியர், மக்கள் படும்பாட்டை தாங்க முடியாமல், பிரம்ம தேவரை நோக்கி தவமிருந்தார். பிரம்மன் காட்சி அளித்த போது, தென் பகுதியை வளமாக்க வேண்டும் என வேண்டினார். ஆனால் பிரம்மாவோ, நீங்கள் சிவ பெருமானிடம் முறையிடுங்கள் அவர் உங்களுக்கு உதவுவார் என்றார். 

ganesh

சிவனை வேண்டிய அகத்தியருக்கு தன் தலையிருந்து செல்லும் கங்கையின் ஒரு பகுதியை அகத்தியருக்கு கொடுத்தார். அதை கமண்டலத்தில் அடைத்து தென் பகுதிக்கு வந்தார். பாரதத்தின் தென் பகுதியை பார்க்க விரும்பிய பிள்ளையார், மூஷக வாகனத்தில் பின் தொடர்ந்து வந்தார். தென் பகுதியை அடைந்த அகத்தியர், சோர்வில் கமண்டலத்தை ஒரு இடத்தில் வைத்து விட்டு வறண்டு போன இடங்களைப் பார்த்து சோகத்தில் அமர்ந்திருந்தார். அங்கு வந்த பிள்ளையார், உடனடியாக தென் பகுதியை செழிப்பாக்க எண்ணி, காகமாக உருவெடுத்து, கமண்டலத்தில் உள்ள தண்ணீரைக் குடிக்க முயற்சிப்பது போல சென்று கீழே தள்ளினார். இதைப் பார்த்து அதிர்ந்த அகத்தியர், தான் அரும்பாடுபட்டு கொண்டு வந்த சிவ பெருமான் வழங்கிய கங்கையை கொட்டிவிட்டாரே என நினைத்து காகத்திற்கு சாபம் வழங்கப் போவதாக கூறினார். 

vinayakar

அப்போது தன் சொந்த உருவத்திற்கு திரும்பிய பிள்ளையாரைப் பார்த்தவுடன் கும்பிட்டார். விநாயகரோ, தென் பகுதி வறண்டு கிடப்பதை பார்க்க முடியவில்லை. அதை உடனடியாக செழிமையாக்க நினைத்ததால் தான் இப்படி செய்தேன். அங்கே பாருங்கள் ஆறு பொங்கி வருகின்றது என்றார்.  விநாயகர் காகமாக மாறி நீரை விரித்ததால் (பரப்பியதால்), காவிரி என பெயர் பெறட்டும் என அகத்தியர், கர்நாடகா, தமிழகத்திற்கு வாழ்வாதாரமாக இருக்கும் காவிரிக்கு பெயர் வைத்தார். 
கமண்டலத்தைத் தட்டி விட்டதால், தலையில் குட்டப் போய், பிள்ளையாரைப் பார்த்ததும், தன் தலையில் தானே குட்டு வைத்துக் கொண்டார் அகத்தியர். அதிலிருந்து தான் கண்பதியை வணங்கும் போதெல்லாம் தலையில் குட்டிக் கொள்கிறோம். நமது ஆணவமும், அகந்தையும் இதன் மூலமாக அழிந்து போவதாக ஐதீகம்!