பிரியங்கா காந்தி நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- பா.ஜ.க. அரசு அதிரடி

 

பிரியங்கா காந்தி நிகழ்ச்சியை புறக்கணித்த காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ.வுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு- பா.ஜ.க. அரசு அதிரடி

உத்தர பிரதேசத்தில் பிரியங்கா காந்தி நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அதிதி சிங்குக்கு அடுத்த 24 மணி நேரத்துக்குள் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது.

கடந்த புதன்கிழமையன்று நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் 150வது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. உத்தர பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜ. அரசும் காந்தியின் பிறந்தநாளை முன்னிட்டு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தை நடத்தியது. அதேசமயம், லக்னோவில் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக அந்த சிறப்பு கூட்டத்தை காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் புறக்கணித்தனர்.

அதிதி சிங்

ஆனால், ரேபரேலி தொகுதி காங்கிரஸ் பெண் எம்.எல்.ஏ. அதிதி சிங் மட்டும் யாரும் எதிர்பாராத வண்ணம் பிரியங்கா காந்தி கலந்து கொண்ட நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு பா.ஜ. அரசு நடத்திய சிறப்பு கூட்டத்தில் பங்கேற்றார். இதனால் அரசியல் பெரும் சலசலப்பு ஏற்பட்டது. ஏனென்றால் அதிதி சிங்கின் அப்பா அகிலேஷ் சிங் தீவிர காங்கிரஸ்காரர் மற்றும் காந்தி குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமானவர். மேலும் அதிதி சிங்கும் ராகுல் காந்தி மற்றும் பிரியங்கா காந்திக்கும் நன்கு அறிமுகம் ஆனவர். அப்படிப்பட்டவர் பிரியங்கா காந்தியின் நிகழ்ச்சியை புறக்கணித்து விட்டு சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்றது பெரும் சர்ச்சையை கிளப்பியது.

ராகுல் காந்தி, அதிதி  சிங்

இந்த நிலையில், சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற 24 மணி நேரத்துக்குள் காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்குக்கு யோகி ஆதித்யநாத் அரசு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கியுள்ளது. பா.ஜ. அரசின் இந்த செயல் எரிகிற தீயில் எண்ணெய்யை ஊற்றுவது போல் சர்ச்சையை பெரிதாக்கியுள்ளது. சிறப்பு சட்டமன்ற கூட்டத்தில் பங்கேற்ற பிறகு அதிதி சிங் கூறுகையில், என்னை பேச்சை நீங்கள் கேட்டிருந்தால் வளர்ச்சி மற்றும்  நிலையான மேம்பாட்டு இலக்குகள் பற்றி மட்டுமே நான் பேசியதை கேட்டு இருப்பீர்கள். எனது தந்தை செய்தது போலவே நான் அரசியல் செய்கிறேன். நான் எது சரியானது என உணருகிறேனோ அதை செய்கிறேன். வளர்ச்சி குறித்து விவாதிக்கும்போது நாம் அதனை கட்சி எல்லைக்குள் அப்பால் சிந்திக்க வேண்டும் என தெரிவித்தார். இரண்டு மாதங்களுக்கு முன் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை நீக்கிய போது பிரதமர் மோடிக்கு அதிதி சிங் ஆதரவு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.