பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்தது 11 ஆயிரம் விவசாயிகள்… பலன் அடைந்தது 11 பேர்தான்….

 

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் பதிவு செய்தது 11 ஆயிரம் விவசாயிகள்… பலன் அடைந்தது 11 பேர்தான்….

சிக்கிம் மாநிலத்தில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் பதிவு செய்துள்ளபோதிலும், 11 பேர் மட்டுமே இந்த திட்டத்தின் பலனை பெற்றுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2019ல் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்த இடைக்கால பட்ஜெட்டில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்தின்கீழ், நாட்டில் உள்ள அனைத்து சிறு மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு மத்திய அரசு ஆண்டுதோறும் குறைந்தபட்ச வருவாய் ஆதரவாக ரூ.6 ஆயிரம் வழங்கும். இந்த திட்டத்தில் ஏராளமான விவசாயிகள் பதிவு செய்துள்ளனர்.

பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டம்

நாடாளுமன்றத்தில் பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தின்கீழ் பலன் அடைந்தவர்கள் குறித்த கேள்விக்கு மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் கூறியதாவது: பிரதம மந்திரி கிஷான் சம்மான் நிதி திட்டத்தில் 9.6 கோடி விவசாய குடும்பங்கள் பதிவு செய்துள்ளன. 2020 பிப்ரவரி 6ம் தேதி நிலவரப்படி, இந்த திட்டத்தின்கீழ் 8.4  கோடி விவசாயிகள் பண பலனை பெற்றுள்ளனர். பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக ரூ.50,522.2 கோடி செலுத்தப்பட்டுள்ளது.

விவசாயி

இந்த திட்டத்தின்கீழ் அதிகபட்சமாக உத்தர பிரதேசத்தை சேர்ந்த விவசாயிகள் 1.8 கோடி பேர் பலன் அடைந்துள்ளனர். அதேசமயம் சிக்கிம் மாநிலத்தில் இந்த திட்டத்தில் 11 ஆயிரத்துக்கும் அதிகமான விவசாயிகள் வெற்றிகரமாக பதிவு செய்துள்ளபோதிலும், 11 விவசாயிகள் மட்டுமே பலன் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.