பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி……. கார்னர் செய்யப்படும் டிடிவி தினகரன்?

 

பிரதமரை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி……. கார்னர் செய்யப்படும் டிடிவி தினகரன்?

தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க இன்று மாலை டெல்லி செல்கிறார்.

சென்னை: தமிழக முதல்வர் பழனிசாமி பிரதமர் மோடியை சந்திக்க இன்று மாலை டெல்லி செல்கிறார்.

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. ஆனால் மத்திய அமைச்சரவை இன்னும் இதற்கு ஒப்புதல் அளிக்கவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்தது. இதனால் தமிழக மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனையடுத்து பிரதமரை விரைவில் சந்தித்து இதுகுறித்து வலியுறுத்தப்படும் என முதல்வர் தெரிவித்திருந்தார். அவரை சந்திப்பதற்காக நேரமும் கோரப்பட்டது.

ஆனால் முதல்வரை சந்திக்க பிரதமர் நேரம் ஒதுக்காமல் இருந்து வந்தார். அதிமுகவுக்கு செல்வாக்கு தமிழகத்தில் குறைந்துவிட்டதால் அக்கட்சியின் மீது பிரதமர் உள்ளிட்ட பாஜக மேலிடத்தினர் அதிருப்தியில் இருப்பதாகவும் இதனால்தான் நேரம் ஒதுக்கப்படவில்லை எனவும் தகவல்கள் வெளியாகின.

இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்தை தமிழக முதல்வர் அண்மையில் சந்தித்தார். அப்போது பாஜகவிற்கு அதிமுக இன்னும் விசுவாசமாகத்தான் இருக்கிறது என அக்கட்சியின் மேலிடத்திற்கு முதல்வர் உணர்த்தியதாகவும் தம்மை சந்திக்க நேரம் ஒதுக்கும்படி ஆளுநர் மூலம் தூது அனுப்பியதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், பிரதமரை சந்திப்பதற்காக முதல்வர் பழனிசாமி இன்று மாலை டெல்லி செல்கிறார். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான சாத்தியக்கூறுகள், ராஜீவ் கொலை குற்றவாளிகளை விடுவிப்பது என பல்வேறு விஷயங்களை அவர் பேச இருப்பதாக கூறப்படுகிறது.

மேலும் டிடிவி – ஓபிஎஸ் சந்திப்பு குறித்து ஈபிஎஸ் பேச இருப்பதாகவும், தமிழகத்தில் இழந்த செல்வாக்கை அதிமுக நிச்சயம் மீட்கும் எனவே வரும் நாடாளுமன்ற தேர்தலை தமிழகத்தில் அதிமுகவும் – பாஜகவும் இணைந்து எதிர்கொள்ள வேண்டும் எனவும் அவர் பிரதமரிடம் வேண்டுகோள் வைக்கலாம் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

அதுமட்டுமின்றி தமிழகத்தில் வளர்ந்து வரும் டிடிவி தினகரன் செல்வாக்கை கட்டுப்படுத்தும் விதமாக அவர் மீது இருக்கும் வழக்குகளை மீண்டும் தூசி தட்ட முதல்வர் பிரதமரிடம் வலியுறுத்துவார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எனவே இந்த சந்திப்பை அடுத்து அதிமுக மேல் பாஜகவுக்கு இருக்கும் அதிருப்தியானது பெருமளவு குறைந்து இனி வரும் காலங்களில் தினகரன் கார்னர் செய்யப்படலாம் என அரசியல் நோக்கர்கள் தெரிவித்து வருகின்றனர்.