“பிரதமரின் அழைப்புக்கு ஆதரவு அளிப்போம்!” – நடிகர் ரஜினிகாந்த் வீடியோ பதிவு

 

“பிரதமரின் அழைப்புக்கு ஆதரவு அளிப்போம்!” – நடிகர் ரஜினிகாந்த் வீடியோ பதிவு

பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு அதன்படி செயல்படுவோம் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

சென்னை: பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு அதன்படி செயல்படுவோம் என நடிகர் ரஜினிகாந்த் ட்விட்டரில் வீடியோ பதிவிட்டுள்ளார்.

கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து கொரோனா வைரஸ் பரவுவதை தடுப்பது குறித்து பிரதமர் மோடி நேற்று முன்தினம் நாட்டு மக்களுக்கு உரை நிகழ்த்தினார். மக்கள் தங்களை தாங்களே தனிமைப்படுத்தினால் கொரோனா பரவுவதை கட்டுப்படுத்த முடியும் என்று அவர் கூறினார். மேலும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மக்கள் ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்றும், காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு கட்டுப்பட்டு அதன்படி செயல்படுவோம் என தனது ட்விட்டர் வீடியோ பதிவில் கூறியுள்ளார். இதுபற்றி அவர் பேசுகையில், “கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாவது கட்டத்தில் உள்ளது. அது மூன்றாவது கட்டத்திற்கு போய் விடக் கூடாது. வெளியில் மக்கள் நடமாடும் இடங்கள்ல உள்ள கொரோனா வைரஸ், 14 மணிநேரம் வரை பரவாமல் இருந்தாலே மூன்றாவது கட்டத்திற்கு போகாமல் தடுத்து விடலாம். அதற்காகவே பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

இதேபோல இத்தாலியில் கொரோனா வைரஸ் இரண்டாவது கட்டத்தில் இருந்தபோது அந்நாட்டு அரசு மக்களுக்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தது. ஆனால் அந்நாட்டு மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அதன் காரணமாக பல ஆயிரக்கணக்கான உயிர்கள் பறிபோய் உள்ளது. எனவே பிரதமரின் ஊரடங்கு உத்தரவுக்கு நாம் அதரவு கொடுப்போம். மருத்துவர்கள், நர்ஸ்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து கொரோனா பாதித்தவர்களுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அதனால் ஊரடங்கு உத்தரவு நாளில் பிரதமர் சொன்னதுபோல அவர்களை மனதார பாராட்டுவோம்” என்று ரஜினிகாந்த் கூறியுள்ளார்.