பிரணாப் முகர்ஜி மற்றும் வி.கே. சிங்கை உளவு பார்க்க சொன்னது யார்? சொல்லுங்க சோனியாஜி! திருப்பி அடித்த பா.ஜ.க.

 

பிரணாப் முகர்ஜி மற்றும் வி.கே. சிங்கை உளவு பார்க்க சொன்னது யார்? சொல்லுங்க சோனியாஜி! திருப்பி அடித்த பா.ஜ.க.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது, அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி மற்றும் ராணுவ தளபதி வி.கே. சிங்கை வேவு பார்க்க சொன்னது யார் என்பதை சோனியா காந்தி வெளியிட வேண்டும் என பா.ஜ.க. வலியுறுத்தியுள்ளது.

இந்தியாவை சேர்ந்த பத்திரிகையாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் உள்பட பல முக்கிய பிரமுகர்களின் வாட்ஸ் ஆப் தகவல்கள் உளவு பார்க்கப்பட்டதாக கடந்த சில தினங்களுக்கு முன் வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்தது. மேலும் இஸ்ரேலை சேர்ந்த என்.எஸ்.ஓ. என்ற நிறுவனம் பெகாசஸ் என்ற உளவு மென்பொருளை பயன்படுத்தி உளவு பார்த்ததாகவும் தெரிவித்தது. தற்போது இது பெரும் பிரச்னையாக உருவெடுத்துள்ளது.

சோனியா காந்தி

இந்த சூழ்நிலையில், இஸ்ரேலின் சாப்ட்வேரை பயன்படுத்தி வாட்ஸ்அப் வாயிலாக சமூக ஆர்வலர்கள் மற்றும் பத்திரிகையாளர்களை உளவு பார்த்ததாக மத்திய அரசு மீது காங்கிரசின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி அண்மையில் குற்றச்சாட்டினார். மேலும், இந்த நடவடிக்கைகள் சட்ட விரோதமானவை மற்றும் அரசியலமைப்புக்கு புறம்பானது மட்டுமல்ல, வெட்கக்கேடானவை என சோனியா காந்தி கடுமையாக தாக்கி இருந்தார். இதற்கு பா.ஜ.க. தற்போது பதிலடி கொடுத்துள்ளது. 

ஜே.பி. நட்டா

இது தொடர்பாக பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி. நட்டா டிவிட்டரில், வாட்ஸ் அப் விவகாரம் தொடர்பாக மத்திய அரசு தெளிவாக விளக்கம் கொடுத்துள்ளது. ஒருவேளை, முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு காலத்தில் அப்போது மத்திய அமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி மற்றும் ராணுவ தளபதியாக இருந்த வி.கே. சிங் ஆகியோரை வேவு பார்க்க ஜன்பத் 10லிருந்து உத்தரவு இட்டது யார் என்பதை திருமதி. சோனியா காந்தியால் தேசத்துக்கு சொல்ல முடியும் என பதிவு செய்து இருந்தார். ஜன்பத் டெல்லியில் உள்ள பகுதி. 10 என்பது ஜன்பத் பகுதியில் சோனியா காந்தி வசிக்கும் வீட்டின் கதவு எண்.