‘பிகில்’ சர்ச்சை எதிரொலி : நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு!

 

‘பிகில்’ சர்ச்சை எதிரொலி : நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் ஆதரவு!

பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்பாக நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது

பிகில் இசை வெளியீட்டு விழா சர்ச்சை தொடர்பாக நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது

நடிகர் விஜய் – அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள மூன்றாவது திரைப்படம் பிகில். இப்படத்தில் விஜய் அப்பா – மகன் என இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். இவர்களுடன் நடிகர் விவேக், யோகிபாபு, மனோபாலா, டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ஏஜிஎஸ் என்டர்டெய்ன்மென்ட் இப்படத்தைத் தயாரித்துள்ளது. இப்படத்தின் போஸ்டர்கள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கடந்த 19ஆம் தேதி நடந்த இசை வெளியீட்டு விழா சென்னை தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரியில் நடைபெற்றது. இந்த விழாவில் ஆளுங்கட்சியைச் சாடும் வகையில் விஜய்  பேசிய பேச்சுக்கள்  இணையத்தில் வைரலானது. மேலும் ஆளுங்கட்சி அமைச்சர்கள் அதுகுறித்து விமர்சிக்கும் அளவிற்குப் பரவலாகப் பேசப்பட்டது. 

bigil

இதையடுத்து நேற்று பிகில் இசை  வெளியீட்டு விழா நடந்த  தாம்பரம் சாய் ராம் பொறியில் கல்லூரிக்கு  நோட்டீஸ் ஒன்று அனுப்பப்பட்டது. அதில், பிகில் இசை  வெளியீட்டு விழாவில் எதன் அடிப்படையில்  அனுமதி கொடுக்கப்பட்டது என்று  உயர் கல்வித்துறை  கேள்வி  எழுப்பியுள்ளதோடு, அதற்கான விளக்கத்தை அளிக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. 

congress

இந்நிலையில் நடிகர் விஜய்-க்கு ஆதரவாகக் காங்கிரஸ் கட்சி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ,  ‘தமிழ்த் திரைப்பட உலகத்தினரால் இளைய தளபதி என்று அழைக்கப்படுகிற நடிகர் விஜய் அவர்களின் பிகில் திரைப்படப் பாடல் வெளியீட்டு விழாவுக்கு அனுமதி வழங்கியதற்காகத் தனியார் கல்லூரி நிர்வாகத்திற்குத் தமிழக அரசின் உயர் கல்வித்துறை செயலாளர் நோட்டீஸ் அனுப்பியிருக்கிறார். அதில் கல்லூரி வளாகத்தில் அரசியல் நிகழ்ச்சிகள் நடப்பதற்கு அனுமதி அளித்தது விதிமுறைகளுக்கு எதிரானது என்றும் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இந்நிகழ்ச்சி கல்லூரி வளாகத்திற்கு வெளியே அமைக்கப்பட்ட அரங்கத்தில் தான் நடைபெற்றிருக்கிறது. இந்நிலையில் இது ஒரு அப்பட்டமான அதிகார துஷ்பிரயோகமாகும்.

இந்த விழாவில் அரங்கத்தில் திரண்டிருந்த ஆயிரக்கணக்காக ரசிகர்கள் மத்தியில் நடிகர் விஜய் உரையாற்றியதில் சில கருத்துக்கள் ஆளும் அதிமுகவினருக்கு எதிராக கூறியதாகத் தவறாகப் புரிந்து கொண்டு இத்தகைய பழிவாங்கும் நடவடிக்கைகளில் தமிழக அரசின் உயர் கல்வித்துறை ஏவி விடப்பட்டிருக்கிறது. இதன் மூலம் திரைப்பட பாடல் வெளியீட்டு வீழவிற்கு அனுமதி வழங்கியதற்காக மிரட்டல் கடிதம் அனுப்பப்பட்டது. அச்சுறுத்தலுக்குக் கல்லூரி நிர்வாகம் இரையாக்கப்பட்டிருக்கிறது. இது ஒரு அரசியல் நிகழ்ச்சி அல்ல. கலைத்துறை சம்மந்தப்பட்ட நிகழ்ச்சியாகும். எனவே இதைவிட ஜனநாயக விரோத பாசிச நடவடிக்கை வேறு எதுவும் இருக்க முடியாது .

bigil

கடந்த காலங்களில்  சென்னை சட்ட கல்லூரிகளில்  நடைபெற்ற ஆண்டு விழாக்களில் மாணவர் சங்க அழைப்பின் பேரில் பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர், முன்னாள்; முதல்வர் எம்ஜிஆர் என பல தலைவர்கள் கலந்து கொண்டு உரையாற்றி இருக்கிறார்கள். இன்னும் பல கல்லூரிகளில் பல அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள் கலந்துகொண்டுள்ளனர் . இதை யாரும் குற்றம் குறை கூறியது இல்லை. இதை அனுமதித்த கல்லூரிகளுக்கு யாரும் நோட்டீஸ் அனுப்பி மிரட்டியது இல்லை. ஜனநாயகத்தின் இத்தகைய நடைமுறைகள் தொடர்ந்து அனுமதிக்கப்பட்டு வருகின்றன. மேலும்  நடிகர் விஜய் பொதுவாக பேசியதை அதிமுக அரசு தவறாக புரிந்துகொண்டிருக்கிறது. இதனால் கல்லூரிக்கு தரப்பட்ட நோட்டீஸை திரும்பப் பெறவேண்டும். அப்படி பெறாவிட்டால் ஆட்சியாளர்கள் கடும் விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆளுங்கட்சி தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தி நடிகர் விஜய்யை மிரட்டிப் பார்க்க நினைப்பதாக அவரது ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.