பா.ஜ.வுக்கு தாவும் முக்கிய தலைகள்…… கலக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி….

 

பா.ஜ.வுக்கு தாவும் முக்கிய தலைகள்…… கலக்கத்தில் ஆம் ஆத்மி கட்சி….

ரிச்சா பாண்டே மற்றும் கபில் மிஸ்ரா பா.ஜ.வுக்கு தாவியதால் ஆம் ஆத்மி கட்சி கொஞ்சம் கலக்கமாகவே காணப்படுகிறது.

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான அரசில் அமைச்சராக பதவி வகித்தவர் கபில் மிஸ்ரா. 2017 மே மாதத்தில் தனது அமைச்சரவையிலிருந்து கபில் மிஸ்ராவை கெஜ்ரிவால் கழற்றி விட்டார். அது முதலே அரவிந்த் கெஜ்ரிவாலை கபில் மிஸ்ரா விமர்சனம் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.வுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ததாக கூறி, டெல்லி சட்டப்பேரவை தலைவர் ராம்நிவாஸ் கோயல் அவரை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்தார்.

கபில் மிஸ்ரா

இதனை எதிர்த்து கபில் மிஸ்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்நிலையில் நேற்று காலை கபில் மிஸ்ரா அதிகாரப்பூர்வமாக பா.ஜ.வில் இணைந்தார். கடந்த சில மாதங்களாக கபில் மிஸ்ரா பா.ஜ.வில் இணைய போவதாக தகவல் வெளிவந்த வண்ணம் இருந்தது. தற்போது அந்த தகவல்கள் உண்மையாகி விட்டது.

கபில் மிஸ்ரா பா.ஜ.வில் இணைந்து குறித்து ஆம் ஆத்மியின் செய்தி தொடர்பாளர் தலைவர் சவுரப் பரத்வாஜ் கூறியதாவது: கபில் மிஸ்ரா தனது முகத்திரையை கழற்றியதற்கு நாங்கள் சந்தோஷம் அடைகிறோம்.  இதுவரை பா.ஜ. தயாரித்து மற்றும் இயக்கிய நாடகங்களை அவர் நடத்தியுள்ளார் என்பதை நாங்கள் நிரூபணம் செய்துள்ளோம். இதுதான் பா.ஜ.வின் அரசியல் டிரேட்மார்க். இது இந்திய அரசியலுக்கு புதிய இயல்பு. 

கபில் மிஸ்ரா அமைச்சராக இருந்த போது டெல்லி ஜல் வாரியத்தில் அவர் மீது 3 குற்றச்சாட்டுகள் இருந்தன. டெல்லி மாநகராட்சி தேர்தல்களில் கட்சியின் வெற்றி வாய்ப்புகளை நாசப்படுத்த அவர் முயற்சி செய்தார். அவர் பா.ஜ. ஏஜெண்டாக செயல்படுகிறார் என எங்களுக்கு முதலில் தகவல் கிடைத்தது.

பா.ஜ.வில் இணைந்த கபில் மிஸ்ரா

மேலும், ஆம் ஆத்மி தலைவர் ரிச்சா பாண்டே பா.ஜ.வுக்கு சென்றது குறித்து கூறுகையில், கட்சி அவர் மீது நம்பிக்கையை துரதிருஷ்டவசமாக உடைத்து விட்டார். அவர் எங்கு சென்றாலும் அவருக்கு நல்ல அமைதியான வாழ்க்கை கிடைப்பதற்கு எங்களது வாழ்த்துக்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

ஆம் ஆத்மியின் முக்கிய தலைவர்கள் பா.ஜ. பக்கம் சாய்வதால் அந்த கட்சிக்குள் உள்ளுக்குள் கொஞ்சம் கலவரமாகதான் உள்ளது. மேலும் கட்சியில் பலர் அதிருப்தி நிலையில் இருப்பதும் ஆம் ஆத்மிக்கு கொஞ்சம் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.