பா.ஜ.வில் இணைந்த 4 தெலுங்கு தேச எம்.பி.க்கள்! பரிதவிக்கும் சந்திரபாபு நாயுடு

 

பா.ஜ.வில் இணைந்த 4 தெலுங்கு தேச எம்.பி.க்கள்! பரிதவிக்கும் சந்திரபாபு நாயுடு

தேர்தல் முடிவுகளால் அதிர்ந்து போய் இருந்த சந்திரபாபு நாயுடுக்கு தற்போது அவரது கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் மூலம் அடுத்த அடி விழுந்துள்ளது. தெலுங்கு தேச கட்சிக்கு மொத்தம் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் இருந்தனர்.

வெங்கய்யா நாயுடுடன் எம்.பி.க்கள் சந்திப்பு

தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த 4 ராஜ்யசபா எம்.பி.க்கள் இன்று மாலை பா.ஜ.வில் இணைந்தனர். மேலும், பா.ஜ.வுடன் இணைவது தொடர்பாக மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நாயுடுவை சந்தித்து கடிதம் வழங்கினர். இதனால் தெலுங்கு தேச கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு கடும் விரக்தியில் உள்ளார்.

சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை மற்றும் ஆந்திர சட்டப்பேரவை தேர்தல்களில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சி படுதோல்வியை சந்தித்தது. கடந்த முறை ஆட்சி கட்டில் இருந்த சந்திரபாபு நாயுடு இந்த முறை மொத்தமுள்ள 151 சட்டப்பேரவை தொகுதிகளில் வெறும் 23 இடங்களை மட்டுமே கைப்பற்றினார். ஆந்திராவில்  உள்ள 25 மக்களவை தொகுதியில் 3 தொகுதிகள் மட்டுமே தெலுங்கு தேசத்துக்கு கிடைத்தது.

தேர்தல் முடிவுகளால் அதிர்ந்து போய் இருந்த சந்திரபாபு நாயுடுக்கு தற்போது அவரது கட்சி ராஜ்யசபா எம்.பி.க்கள் மூலம் அடுத்த அடி விழுந்துள்ளது. தெலுங்கு தேச கட்சிக்கு மொத்தம் 6 ராஜ்யசபா எம்.பி.க்கள் இருந்தனர். இதில், ஒய்.எஸ். சவுத்ரி, சி.எம். ரமேஷ், டி.ஜி. வெங்கடேஷ் மற்றும் ஜி.எம். ராவ் ஆகிய 4 எம்.பி.க்களும் இன்று அந்த கட்சியிலிருந்து விலகி பா.ஜ.வில் இணைந்தனர். பின்னர் இன்று மாலை மாநிலங்களவை தலைவர்  வெங்கய்யா நாயுடுவை சந்தித்து  பா.ஜ.வில் உடனடியாக இணைவது தொடர்பாக அவரிடம் கடிதம் வழங்கினர்

சந்திரபாபு நாயுடு

தெலுங்கு தேச எம்.பி.க்கள் 4 பேரும் கட்சியை விட்டு விலகி பா.ஜ.வில் இணைந்தது சந்திரபாபு நாயுடுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின் போது பா.ஜ.வை சந்திரபாபு நாயுடு கடுமையாக விமர்சனம் செய்தார். இந்நிலையில், அவரது கட்சியை சேர்ந்த 4 எம்.பி.க்கள்  பா.ஜ.வில் இணைந்ததால் சந்திரபாபு நாயுடு கடும் அதிர்ச்சி உள்ளார்.

தற்போது அமெரிக்காவில் இருக்கும் சந்திரபாபு நாயுடு இது குறித்து கூறுகையில், இது போன்ற நெருக்கடி ஒன்றும் புதிய கிடையாது. இதனால் கட்சி தொண்டர்கள் பதற்றம் அடையமாட்டார்கள். தெலுங்கு தேசத்தை பலவீனப்படுத்தும் பா.ஜ.வின் முயற்சிக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.