பா.ஜ. அரசு கவிழ்ந்தால் மாற்று அரசு அமைக்க முயற்சி செய்வோம்- தேசியவாத காங்கிரஸ்

 

பா.ஜ. அரசு கவிழ்ந்தால் மாற்று அரசு அமைக்க முயற்சி செய்வோம்- தேசியவாத காங்கிரஸ்

மகாராஷ்டிராவில் பெரும்பான்மையை நிருபிக்க முடியாமல் ஆட்சி பா.ஜ.க. கவிழ்ந்தால், நாங்கள் உறுதியாக மாற்று அரசு அமைக்க முயற்சி செய்வோம் என தேசியவாத காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

மகாராஷ்டிராவில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.-சிவ சேனா கூட்டணி 161 இடங்களை வென்றது. இதனையடுத்து அதிக இடங்களை வென்ற (105) பா.ஜ.க. ஆட்சி அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், முதல்வர் பதவியை 2.5 ஆண்டுகள் விட்டு கொடுக்க வேண்டும் என சிவ சேனா போர்க்கொடி தூக்கியது. இதனால் பா.ஜ.க. ஆட்சி அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.

பகத் சிங் கோஷ்யாரி

புதிய அரசு அமைப்பதற்கான காலக்கெடு கடந்த வெள்ளிக்கிழமையுடன் முடிவடைந்ததால் அம்மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் மற்றும் அமைச்சர்கள் தங்களது ராஜினாமா கடிதத்தை அன்று அம்மாநில கவர்னர் பகத் சிங் கோஷ்யாரிடம் வழங்கினர். இந்நிலையில், அதிக இடங்களை வென்ற கட்சி என்ற அடிப்படையில் பா.ஜ.க.வை ஆட்சி அமைக்க நேற்று கவர்னர் அழைப்பு விடுத்தார்.

பா.ஜ.க.

இது குறித்து தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நவாப் மாலிக் கூறுகையில், அதிக இடங்களை வென்ற பா.ஜ.க.வை அரசு அமைக்க கவர்னர் அழைப்பு விடுத்துள்ளார். பா.ஜ.க.வுக்கு பெரும்பான்மை உள்ளதா என்பதை கவர்னர் உறுதி செய்ய வேண்டும். இல்லையென்றால் குதிரை வர்த்தகம் நடைபெறும். இருப்பினும் பா.ஜ.க. அரசு அமைத்தால், பெரும்பான்மைக்கான வாக்கெடுப்பின்போது பா.ஜ.க.வுக்கு எதிராக நாங்கள் வாக்களிப்போம். பா.ஜ.க. அரசு கவிழ்ந்தால், நாட்டின் நலன் கருதி மாற்று அரசு அமைக்க நாங்கள் கண்டிப்பாக முயற்சி செய்வோம் என தெரிவித்தார்.