பால் தாக்கரே குடும்பத்திலிருந்து மேலும் ஒரு அரசியல் வாரிசு! பா.ஜ.க. பக்கம் சாயும் ராஜ் தாக்கரே….

 

பால் தாக்கரே குடும்பத்திலிருந்து மேலும் ஒரு அரசியல் வாரிசு! பா.ஜ.க. பக்கம் சாயும் ராஜ் தாக்கரே….

மகாராஷ்டிரா அரசியலில் பால் தாக்கரே குடும்பத்திலிருந்து மேலும் ஒரு அரசியல் வாரிசு உருவாகிறது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தலைவர் ராஜ்தாக்கரே தனது மகன் அமித் தாக்கரேவின் அரசியல் பயணத்தை நேற்று தொடங்கி வைத்தார்.

மறைந்த சிவ சேனா தலைவர் பால் தாக்கரேவின்  மருமகன்தான் ராஜ்தாக்கரே. ஆரம்பத்தில் சிவ சேனாவில்தான் ராஜ் தாக்கரே இருந்தார். ஆனால் கட்சியில் உத்தவ் தாக்கரேவுக்கு பால்தாக்கரே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கியது அவருக்கு பிடிக்கவில்லை. இதனையடுத்து சிவ சேனாவிலிருந்து வெளியே வந்து மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சி தொடங்கினார்.பால்தாக்கரே மறைவுக்கு பிறகும் அவர் சிவ சேனாவுடன் இணையவில்லை. 

பால் தாக்கரே

நவநிர்மான் சேனா கட்சியை தொடர்ந்து நடத்தி வருகிறார். மும்பையில் நேற்று மகாராஷ்டிரா நவநிர்மான் சேனா கட்சியின் பிரம்மாண்டமான கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தின் கட்சியின் புதிய கொடியை அறிமுகம் செய்து வைத்தார். மேலும், தனது 27 வயது மகன் அமித் தாக்கரேவை அறிமுகம் செய்து வைத்தார். நவநிர்மான் சேனா கட்சி தனது அணுகுமுறையை தற்போது முற்றிலும் மாற்றி வருகிறது என்பதை அந்த கூட்டம் தெளிவாக உணர்த்தியது. 

அமித் தாக்கரே

எப்போதும் கூட்டங்களில் ராஜ் தாக்கரே பேசும் போது, எனது மராட்டிய சகோதரி மற்றும் சகோதரர்களை என்றுதான் தொடங்குவார். ஆனால் நேற்று எனது இந்து சகோதரிகள் மற்றும் சகோதரர்களை என பேசினார். மேலும் சட்டவிரோத ஊடுருவல்காரர்களை வெளியேற்ற வேண்டும். குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு ஆகிய பணிகளை தொடர்ந்து நாம் மேற்கொண்டால் பாகிஸ்தான் மற்றும் வங்கதேச அகதிகளை வெளியே அனுப்பி விடலாம். இந்த விஷயத்தில் அரசுக்கு நான் ஆதரவு அளிப்பேன் என கூறினார்.  பா.ஜ.க. கூட்டணியை சிவ சேனா முறித்து கொண்டதால், பா.ஜ.க. கூட்டணி வைத்து அந்த வெற்றிடத்தை நாம் நிரப்பி விடலாம் என்ற கணக்கில்தான் ராஜ் தாக்கரே தற்போது இந்துத்துவா நிலைப்பாட்டை முன்னிலை படுத்தியுள்ளதாக தெரிகிறது