பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு: கொந்தளிக்கும் மக்கள்!

 

பாலத்திற்காக தோண்டிய பள்ளத்தில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழப்பு: கொந்தளிக்கும் மக்கள்!

புதிதாக கட்டப்படும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், தவறி விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல்: புதிதாக கட்டப்படும் பாலத்திற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில், தவறி விழுந்த மெக்கானிக் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

திண்டுக்கல் திருச்சி சாலையில் தீப்பாச்சியம்மன் கோயில் அருகே மெக்கானிக் கடை நடத்தி வருபவர் சங்கர். இவர் திண்டுக்கல்லை அடுத்துள்ள ட்ரெஸ்ஸரி காலனி பகுதியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். 

death

இந்நிலையில், இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தனது இருசக்கர வாகனத்தில் செட்டிநாயக்கன்பட்டி செல்வதற்காக காந்திநகர் வழியாக சென்றார். அப்போது, அந்த சாலையில் புதிதாக பாலம் அமைப்பதற்கு சுமார் 15 அடி ஆழத்தில் பள்ளம் தோண்டப்பட்டு கடந்த 4 மாதமாக கிடப்பில் போடப்பட்டிருந்த பள்ளித்தில் எதிர்பாராதவிதமாக தவறி விழுந்ததில் சம்பவ இடத்திலேயே சங்கர் உயிரிழந்துள்ளார். 

dindugal

பள்ளத்தில் சங்கர் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவ்வழியே சென்ற மக்கள், இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், அவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இது தொடர்பாக, செய்தியாளர்களிடம் பேசிய அப்பகுதி மக்கள், மிக நீண்ட காலமாக அந்த பள்ளம் கிடப்பில் இருப்பதாகவும், எச்சரிக்கை பலகைகள் எதுவும் வைக்கப்படாமல் இருந்ததே இந்த சம்பவத்திற்கு காரணம் என்றும் ஆதங்கப்படுகின்றனர்.