பாபர் மசூதி வழக்கில் சமரசமாக போக வாய்ப்பில்லை- முஸ்லிம் வாரியம் தகவல்

 

பாபர் மசூதி வழக்கில் சமரசமாக போக வாய்ப்பில்லை- முஸ்லிம் வாரியம் தகவல்

பாபர் மசூதி வழக்கில் மத்தியஸ்தம் அல்லது நல்லிணக்கத்துக்கு வாய்ப்பு இல்லை என அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி.) உறுதியாக தெரிவித்துள்ளது.

அயோத்தி வழக்கு தொடர்பான வழக்கு விசாரணை உச்ச நீதிமன்றத்தில் இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த வார இறுதிக்குள் வழக்கு தொடர்பான வாதங்கள் முடிவடைந்து விடும். இதனையடுத்து உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கும் எதிர்பார்க்கபடுகிறது. இந்நிலையில், பாபர் மசூதி தொடர்பாக நீதிமன்றத்துக்கு வெளியே சமரசம் செய்து கொள்ள வேண்டும் என சிலர் கூறி வருகின்றனர்.

உச்ச நீதிமன்றம்

இது தொடர்பாக அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் (ஏ.ஐ.எம்.பி.எல்.பி.) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: மசூதிக்காக அர்ப்பணிக்கப்பட்ட இடம் என்ற முஸ்லிம்  சமுதாயத்தின் அடிப்படை நிலைப்பாட்டை வலியுறுத்த தீர்மானிக்கப்பட்டது. அந்த நிலையை மாற்றவோ, மாற்றங்கள் செய்யவோ எந்தவகையிலும் முடியாது. ஷரியத் சட்டம் அதனை அனுமதிக்காது.  முஸ்லிம்களின் இந்த சமர்ப்பிப்பு வரலாற்று உண்மைகள் மற்றும் வேறு எந்த வழிபாட்டு தலங்களையும் இடிக்காமல் பாபர் மசூதி கட்டப்பட்டது என்பதற்கான ஆதாரங்களை அடிப்படையாக கொண்டது.

உண்மை மற்றும் நீதி ஆகியவற்றின் அடிப்படையில் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு முஸ்லிம்களுக்கு சாதகமாக வரும் என நம்புகிறோம். இறுதி தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மத்தியஸ்தம் உள்ளிட்ட பல திட்டங்கள் முன்வைக்கப்பட்டிருந்தாலும் இந்த வழக்கில் முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம் முழுமையாக ஒத்துழைத்தது. ஆனால் பல முயற்சிகளுக்கு பிறகு இந்த வழக்கில் மத்தியஸ்தம் அல்லது நல்லிணக்கத்திற்கான சாத்தியம் இல்லை என்பது தெளிவாகி உள்ளது.

அனைத்து இந்திய முஸ்லிம் தனிநபர் சட்ட வாரியம்

இந்த வழக்கில் சட்ட நடவடிக்கைகள் இறுதி கட்டத்தில் இருப்பதால், இப்போது எந்தவொரு மத்தியஸ்தம் அல்லது நல்லிணக்கத்திற்கும் சாத்தியமில்லை என்பது தெளிவாகியுள்ளது. இந்த வழக்கை இந்த நாடும் மட்டுமல்ல உலகமே பார்த்து கொண்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்பின் அடிப்படை மதிப்புகளுடன் ஒத்துப்போகும் என்று சொல்லத் தேவையில்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கபட்டுள்ளது.