பாத ரட்சையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வடபழனி முருகன்! 

 

பாத ரட்சையுடன் பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் வடபழனி முருகன்! 

வடபழனி முருகன்கோயிலில் முருகன் தாமரைப் பீடத்தின் மீது அமர்ந்து இருப்பதும் மேலும் முருகன் வலது பாதத்தை முன் வைத்து இருப்பதும் வேறு எந்த முருகன் கோயில்களிலும் காணமுடியாத அற்புத காட்சியாகும்.

சென்னையை சுற்றி அமைந்துள்ள பிரசித்திபெற்ற முருகன் கோயில்களில் மிக முக்கிய கோயிலாக விளங்குவது சென்னை வடபழனியில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும். அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருத்தலம் 19-ம் நூற்றாண்டின் இறுதியில் கட்டப்பட்டது.

vadapalani

முதன் முதலில் சிறிய ஓலைக்கூரைக் கொட்டகை அமைக்கப்பட்டு, அதில் முருகனுடைய வண்ண ஓவியப்படம் வைத்து தீவிர முருக பக்தரான அண்ணாசாமி நாயக்கர் என்பவர் வழிபட்டு வந்தார்.

இவர் தான் இருந்த வீட்டை சிறிய கீற்றுக் கொட்டகையாக போட்டு அங்கு குறிசொல்லும் மேடை அமைத்து பழனியிலிருந்து வாங்கி வந்த பழநி ஆண்டவர் படத்தை அங்கு வைத்து பூஜை செய்தவர். 

இவர் வைத்து பூஜை செய்த பழநி ஆண்டவர் படம் இன்றும் சன்னதியின் உட்பிரகாரத்தில் வடக்கு மண்டபத்தில் இருப்பது என்பது குறிப்பிடத்தக்கது. இரத்தினசாமி தம்பிரான் ஆண்டவருக்கு பல்வேறு கைங்கரியங்கள் செய்தவர்.

vadaplnai

இவர் அண்ணாச்சாமி தம்பிரானின் தொண்டர் ஆவார். அண்ணாச்சாமிக்கு பிறகு இவர் காலத்தில் தான் இங்குள்ள முருகப்பெருமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. இப்போதுள்ள கருவறைப் பகுதி உள்ள இடத்தில் செங்கல், சுண்ணாம்புக் கட்டிடம் கட்டப்பட்டது.

குறிசொல்லி வந்த மேடையை வடபழநி ஆண்டவர் கோயில் என அழைக்கச் செய்தவரும் இவர்தான்.

இப்போதுள்ள வடபழநி கோயிலின் கர்ப்ப கிரகமும், முதல் உட்பிரகாரத் திருச்சுற்றும் மற்றும் கருங்கல் திருப்பணி ஆகியவற்றை செய்வித்தவர் பாக்யலிங்க தம்பிரான் ஆவார். இவரும் வடபழநி கோயிலுக்கு பல்வேறு கைங்கரியங்கள் செய்தவர்.

vadapalani

இவர் காலத்தில்தான் இக்கோயில் மிகவும் புகழ் பெற்று விளங்க தொடங்கியது. இம்மூவரின் சமாதிகளும் வடபழநி ஆண்டவர் கோயிலுக்கு வடமேற்காக 200 மீட்டர் தொலைவில் அமைந்து இருக்கின்றன. இப்போதுள்ள கோயிலின் தென்கிழக்குப் பகுதியில் பழைய குறிமேடை இருந்த இடம் இருக்கிறது.  

இத்தலத்தில் பாத ரட்க்சையுடன் (காலணிகள்) முருகன் அருள்பாலிப்பது மற்றும் சுவாமி தாமரைப் பீடத்தின் மீது இருப்பது சிறப்பு சுவாமி வலது பாதத்தை முன் வைத்து இருப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சாதுக்கள் பிரதிஷ்டை செய்த தலம் ஆதலால் இத்தலத்து இறைவனை வணங்குவது சாலச் சிறந்தது.வேண்டியதெல்லாம் தரும் வடபழநி ஆண்டவர் சன்னதியின் முக்கிய நேர்த்திகடன் முடி காணிக்கையாகும்.

muruga

தவிர வேல் காணிக்கை, பணம், வெள்ளியினால் ஆன வேல் முதலியவற்றை பக்தர்கள் உண்டியலில் செலுத்துகிறார்கள். 

தவிர உண்டியல் காணிக்கை இக்கோயிலின் மிக முக்கிய வருமானம் ஆகும்.பால், சந்தனம், பஞ்சாமிர்தம், விபூதி , சந்தனம் ஆகிவற்றாலான அபிஷேகங்கள் சுவாமிக்கு நேர்த்திகடனாக நடைபெறுகின்றன.பழநிக்கு செல்ல இயலாத பக்தர்கள் இத்தலத்து ஆண்டவரை வழிபடுவது மிகுந்த நன்மை தரும் .

சுவாமி : வடபழனி ஆண்டவர் 

அம்பாள் : வள்ளி, தெய்வானை

தீர்த்தம் : திருக்குளம்

தலவிருட்சம் : அத்தி மரம் 

நடைதிறப்பு : காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 4 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

செவ்வாய்க்கிழமை  காலை 5 மணி முதல் 12.30 மணி வரை, மாலை 3 மணி முதல் இரவு 8.30 மணி வரை திறந்திருக்கும்.

திருவிழாக்கள் : சித்திரை தமிழ்ப்புத்தாண்டு, கிருத்திகை, சித்ரா பௌர்ணமி, வைகாசி விசாகம் 11 நாட்கள் வீதி உலா பெருந்திருவிழா ஆனி, ஆடி, ஆவணி சுவாமி வீதி உலா,ஐப்பசி கந்த சஷ்டி 6 நாட்கள் பங்குனி கிருத்திகை லட்ச்சார்ச்சனை 3 நாட்கள் தெப்பதிருவிழா 6 நாட்கள்.