பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு… தேசத்தின் சொத்துக்களை மற்றும் வளங்களை விற்பனை செய்வதற்கான பெரும் அனுமதி….காங்கிரஸ் குற்றச்சாட்டு..

 

பாதுகாப்பு துறையில் அன்னிய முதலீடு அதிகரிப்பு… தேசத்தின் சொத்துக்களை மற்றும் வளங்களை விற்பனை செய்வதற்கான பெரும் அனுமதி….காங்கிரஸ் குற்றச்சாட்டு..

பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கான உச்ச வரம்பு அதிகரிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் தேசத்தின் சொத்துக்கள் மற்றும் வளங்களை விற்பனை செய்வதற்கான பெரும் அனுமதி என மத்திய அரசை காங்கிரஸ் கட்சி குற்றச்சாட்டியுள்ளது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட துறைகளுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில் மத்திய அரசு ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சிறப்பு பொருளாதார  தொகுப்பை செயல்படுத்த உள்ளதாக அறிவித்தது. மேலும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த சில தினங்களாக தினந்தோறும் துறைவாரியாக பொருளாதார தொகுப்பு குறித்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் நேற்றைய அறிவிப்பின்போது, நிலக்கரி, தாதுக்கள், பாதுகாப்பு துறை, வான்வெளி, மேலாண்மை, விமான நிலையம், மின்சார பகிர்மானம், விண்வெளி மற்றும் அணு மின்சாரம் போன்ற துறைகளில் சீர்த்திருத்தங்கள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார். குறிப்பாக பாதுகாப்பு தளவாடங்கள் தயாரிப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கான உச்ச வரம்பு 49 சதவீதத்திலிருந்து 74 சதவீதமாக உயர்த்தப்படுவதாக அறிவித்தார்.

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன் சிறப்பு பொருளாதார தொகுப்புகள் குறித்த தகவல்களை தெரிவித்த அடுத்த சில மணி நேரங்களில், பாதுகாப்பு துறையில் அன்னிய நேரடி முதலீடுக்கான உச்ச வரம்பை மத்திய அரசு உயர்த்தியது உள்ளிட்ட நடவடிக்கைகளை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆனந்த் சர்மா குற்றச்சாட்டினார். இது தொடர்பாக ஆனந்த் சர்மா டிவிட்டரில்: கொரோனா தொற்றுநோய் மற்றும் லாக்டவுன் ஆகியவை நாடாளுமன்ற ஜனநாயகத்தை அழிக்கவும், தேசத்தின் சொத்துக்கள் மற்றும் வளங்களை விற்பனை  செய்ய பெரும் அனுமதி அளிக்கவும் அரசாங்கத்துக்கு எந்த அங்கீகாரத்தையும் வழங்கவில்லை. 

பிரதமர் மோடி

பிரதமர் நரேந்திர மோடியிடம் எனது கேள்வி என்னவென்றால்: பாதுகாப்பு, விண்வெளி மற்றும் வான்வெளியில் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு திறப்பது ஆத்மா நிர்பர் பாரதத்தை (சுயசார்பு பாரதம்) உருவாக்குமா? இது குறித்து ஒரு தேசிய விவாதம் நடத்த வேண்டும் என பதிவு செய்து இருந்தார். ஒரு பரந்த தேசிய ஒருமித்த கருத்து இல்லாமல், தேசிய பாதுகாப்பு மற்றும் தன்னம்பிக்கைக்கு நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் தன்னிச்சையான முடிவுகளை எடுக்க மோடி அரசுக்கு  ஆணை உள்ளதா?. இவ்வாறு அதில் பதிவு செய்துள்ளார்.