பாஜக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: எல்.கே.சுதீஷ்

 

பாஜக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சு: எல்.கே.சுதீஷ்

மக்களவை தேர்தலுக்காக பாஜக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்

சென்னை: மக்களவை தேர்தலுக்காக பாஜக-வுடன் தேமுதிக கூட்டணி பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருப்பதாக தேமுதிக துணை பொதுச்செயலாளர் எல்.கே.சுதீஷ் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. மக்களவை தேர்தலுக்கான முதல்கட்ட பணிகளை இந்திய தலைமை தேர்தல் ஆணையம் துவங்கியுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் சூழலில், கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

இந்நிலையில், தேமுதிக கொடி நாளை முன்னிட்டு அக்கட்சியின் அலுவலகத்தில் அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், விஜயகாந்தின் மைத்துனருமான எல்.கே.சுதீஷ் கொடியேற்றினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், பாஜக-வுடன் தேமுதிக கூட்டணிப் பேச்சுவார்த்தை நடத்துவதாக வரும் செய்திகள் உண்மை தானா? என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஆம் உண்மை தான் பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. கூட்டணி குறித்து பல கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்த் இரு வாரங்களில் நாடு திரும்பியதும் அவரிடம் அந்த அறிக்கை அளிப்போம். பிப்ரவரி மாதம் இறுதிக்குள் கூட்டணி இறுதி செய்யப்படும் என்றார்.

கூட்டணி குறித்த முடிவுகளை விஜயகாந்த் அறிவிப்பார் என தெரிவித்த சுதீஷ், நாடாளுமன்ற தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகவும், தொகுதி எது என்பதை விஜயகாந்த் முடிவு செய்வார் எனவும் தெரிவித்தார்.

கடந்த 2014-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக உடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.