பாஜக-வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக பிரசாரம்: திருமுருகன் காந்தி

 

பாஜக-வுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளுக்கு எதிராக பிரசாரம்: திருமுருகன் காந்தி

பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளை எதிர்த்து மே 17 இயக்கம் பிரசாரம் செய்யும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்

சென்னை: பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளை எதிர்த்து மே 17 இயக்கம் பிரசாரம் செய்யும் என அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி அறிவித்துள்ளார்.

பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் வேற்று பெற்று அரியணை ஏறியது. இந்த அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவடையவுள்ளது. இதையடுத்து, வருகிற ஏப்ரல் அல்லது மே மாதம் மக்களவைக்கு தேர்தல் நடைபெறலாம் என தெரிகிறது. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.

தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக் கட்டிலில் ஏற மத்திய பாஜக அரசு தீவிரம் காட்டி வருகிறது. அதேபோல், மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் முனைப்பு காட்டி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான அணியை பலப்படுத்தும் முயற்சிகளில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தீவிரம் காட்டி வருகிறார்.

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வரும் சூழலில், கூட்டணி, தொகுதி பங்கீடு போன்றவை வெளிப்படையாக அறிவிக்கப்படாவிட்டாலும் ரகசிய பேச்சு வார்த்தைகள் நடந்து வருகிறது. தமிழகத்தை பொறுத்தவரை, ஜெயலலிதா, கருணாநிதி இல்லாத தேர்தல் என்பதால் கூடுதல் முக்கியத்துவம் பெற்றுள்ளது. காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுக தலைமையில் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளது. அதேசமயம், அதிமுக – பாஜக – பாமக கட்சிகள் கூட்டணி அமைக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தமிழகத்தில் இயற்கை பேரிடர் பாதிப்புகளை பார்வையிட பிரதமர் மோடி வராததால் பாஜகவுடன் தமிழக கட்சிகள் கூட்டணி வைக்கக் கூடாது என வேண்டுகோள் விடுத்துள்ள மே 17 இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி, தமிழகத்தில் பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் கட்சிகளை எதிர்த்து மே 17 இயக்கம் பிரசாரம் செய்யும் எனவும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, கஜா புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை பார்வையிட பிரதமர் வராதது சர்ச்சையானது என்பதும், அதனை சுட்டிக் கட்டி தமிழகம் வரும்போதெல்லாம் பிரதமருக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டமும், சமூக வலைதளங்களில் #GoBackModi என்ற கேஷ்டேக்குகளை டிரென்ட் ஆக்குவது என்பதும் குறிப்பிடத்தக்கது.