பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி வாரனாசியில் மீண்டும் போட்டி!

 

பாஜக முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு; பிரதமர் மோடி வாரனாசியில் மீண்டும் போட்டி!

நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது

புதுதில்லி: நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவை தேர்தல் ஏப்ரல் 11 முதல் மே 19-ம் தேதி வரை நடைபெறுகிறது. தேர்தல் முடிவுகள் மே 23-ம் தேதி வெளியாகிறது. இந்த தேர்தலில் ஆட்சியை பிடிக்க பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் வியூகம் வகுத்து வருகிறது. தேர்தலுக்கான கூட்டணி பேச்சுவார்த்தயை இறுதி செய்துள்ள அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து பிராசாரத்தை தொடங்கியுள்ளன.

இந்நிலையில், நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை பாஜக வெளியிட்டுள்ளது. மொத்தம் 184 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை மத்திய அமைச்சர் ஜே.பி.நட்டா வெளியிட்டார்.

அதன்படி, பிரதமர் மோடி வாரணாசி தொகுதியில் மீண்டும் போட்டியிடவுள்ளார். பாஜக தேசிய தலைவர் அமித்ஷா காந்தி நகர் தொகுதியிலும், ராஜ்நாத் சிங் லக்னோ தொகுதியிலும், நாக்பூர் தொகுதியில் நிதின் கட்கரியும் போட்டியிடவுள்ளனர்.

இந்த பட்டியலில் தமிழக பாஜக வேட்பாளர்களின் பெயர்களும் அதிகாரப்பூர்வமாக இடம் பெற்றிருந்தது. அதன்படி, கன்னியாகுமரியில் பொன்.ராதாகிருஷ்ணன், தூத்துக்குடியில் தமிழிசை சவுந்தரராஜன், சிவகங்கையில் ஹெச்.ராஜா, கோவையில் சி.பி.ராதாகிருஷ்ணன், ராமநாதபுரத்தில் நயினார் நாகேந்திரனும் போட்டியிடவுள்ளனர்.

கடந்த 2014 மக்களவை தேர்தலில் மோடி வாரணாசியுடன் சேர்த்து குஜராத்தின் வடோதராவிலும் போட்டியிட்டார். பின்னர், வடோதரா தொகுதி உறுப்பினர் பதவியை அவர் ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.