பாஜக மாமனோ மச்சானோ பங்காளியோ இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

 

பாஜக மாமனோ மச்சானோ பங்காளியோ இல்லை: அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்

அதிமுகவிற்கு பாஜக மாமனோ மச்சானோ பங்காளியோ இல்லை என்பதால் தேர்தல் தோல்வி எங்களுக்கு எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை: அதிமுகவிற்கு பாஜக மாமனோ மச்சானோ பங்காளியோ இல்லை என்பதால் தேர்தல் தோல்வி எங்களுக்கு எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநிலங்களுக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, பாஜக ஆட்சி செய்து வந்த ம.பி, ராஜஸ்தான், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் தனது ஆட்சியை பாஜக இழந்துள்ளது.   

பாஜகவின் இந்த வீழ்ச்சியை காங்கிரஸ் கட்சிக்கு கிடைத்த அங்கீகாரமாக அரசியல் விமர்சகர்கள் பார்க்கின்றனர். ஏனெனில், பாஜகவை எதிர்க்க வலிமையான தலைவர் இல்லை என கூச்சலிட்டு வந்த பாஜக ஆதரவாளர்களுக்கு, இந்த தேர்தல் முடிவுகள் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்க முடியும்.

இந்நிலையில், இந்த தேர்தல் முடிவுகள் குறித்து சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், “அதிமுகவிற்கு பாஜக மாமனோ மச்சானோ பங்காளியோ இல்லை. அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லாததால் அவர்களின் தோல்வி எங்களுக்கு எந்த வருத்தத்தையும் ஏற்படுத்தவில்லை” என தெரிவித்துள்ளார்.

மேலும், அரசியலில் நிரந்தர நண்பர்களும் இல்லை நிரந்தர எதிரியும் இல்லை. தற்போது இருக்கக்கூடிய அரசியல் சூழ்நிலை 6 மாதம் கழித்து வேறு மாதிரியாகவும் இருக்கலாம். எனவே தற்போதைய தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தல் சமயத்தில் இருக்கும் என்பதை இப்போதே கூற இயலாது என்றும் அவர் தெரிவித்தார்.