பாஜக துணையுடன் தேர்தலை ரத்து செய்துவிட்டனர்: முத்தரசன்

 

பாஜக துணையுடன் தேர்தலை ரத்து செய்துவிட்டனர்: முத்தரசன்

திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என பயந்து பாஜக துணையுடன் தேர்தலை நிறுத்திவிட்டனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

தஞ்சாவூர்: திமுக வேட்பாளர் வெற்றி பெற்றுவிடுவார் என பயந்து பாஜக துணையுடன் தேர்தலை நிறுத்திவிட்டனர் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மறைவை தொடர்ந்து திருவாரூருக்கு வரும் 28-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதற்காக திமுக, அமமுக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் வேட்பாளர்களையும் அறிவித்திருந்தன. ஆனால், கஜா புயல் நிவாரணப்பணிகளை சுட்டிக்காட்டி டிசம்பர் 3-ம் தேதி தமிழக அரசின் தலைமைச்செயலாளர் கிரிஜா கடிதம் எழுதியிருந்தார் என கூறி திருவாரூர் இடைத்தேர்தலை ரத்து செய்து தலைமை தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.

இந்நிலையில், தேர்தல் ரத்தானது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், திருவாரூர் தொகுதி இடைத்தேர்தலை தேர்தல் ஆணையம் ரத்து செய்ததை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வரவேற்கிறது. 5 மாநிலங்களுக்கு தேர்தல் நடைபெற்ற போது தமிழகத்தில் பருவமழையை காரணம் காட்டி இடைத்தேர்தலை தமிழக அரசு நிறுத்திவிட்டது.

முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தமிழக பாஜக தலைவர் தமிழிசை ஆகியோர் சந்தித்து பேசினர். அதற்கு பிறகு தமிழிசை , திருவாரூர் தேர்தல் நடந்தாலும் நடக்கலாம், நடக்காமலும் இருக்கலாம் என்று தெரிவித்தார். இது எங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. பாஜகவின் கைப்பாவையாக அதிமுக இருக்கிறது.

திருவாரூர் தேர்தல் ஒருவேளை நடைபெற்றிருந்தால் திமுக வேட்பாளர்தான் வெற்றி பெற்றிருந்திருப்பார். அதிமுக டெபாசிட் இழந்திருக்கும். இதற்கு பயந்துதான் பாஜக துணையுடன் தேர்தலை நிறுத்திவிட்டனர் என்றார்.