பாஜக கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவு: ராகுல் தாக்கு

 

பாஜக கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைவு: ராகுல் தாக்கு

ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பாஜக அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்

ஜெய்பூர்: ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பாஜக அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் கடுமையாக தாக்கி பேசியுள்ளார்.

ராஜஸ்தான், மத்தியப்பிரதேசம், சத்தீஸ்கர், மிசோரம், தெலங்கானா மாநில தேர்தல் தேதிகளை அண்மையில் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதையடுத்து, அங்கு தேசிய கட்சிகள் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில், ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசார கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் தலைவர் ராகுல், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி உள்ளிட்ட பாஜக அரசின் கொள்கைகளால் நாட்டின் பொருளாதாரம் சீர்குலைந்துள்ளதாக குற்றம் சாட்டினார்.

மேலும் பேசிய அவர், கடந்த காங்கிரஸ் கூட்டணி அரசில் ரூ.70 ஆயிரம் கோடி கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், தற்போதைய அரசில் ரூ.3.5 லட்சம் கோடி வாராக்கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள், இளைஞர்களுக்கு பிரதமர்  உதவவில்லை. விவசாயிகளின் கடனை அவர் தள்ளுபடி செய்யவில்லை. நாட்டின் தொழிலதிபர்கள் பிரதமரால் பயனடைந்துள்ளனர். சிறு-குறு தொழில், பொது மக்கள், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கு எதிராக பாஜக அரசு செயல்பட்டு வருகிறது என்றும் குற்றம் சாட்டினார்.

முன்னதாக, நாட்டில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு வேகமான மற்றும் அதிக அளவிலான பொருளாதார சீர்திருத்தங்களை எங்கள் தலைமையிலான மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. இதனால், மிக வேகமாக நாடு முன்னேறுகிறது என பிரதமர் மோடி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.