பாக்.,-கிடம் சிக்கிய விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்!!-முழு விவரம்

 

பாக்.,-கிடம் சிக்கிய விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர்!!-முழு விவரம்

மாயமான இந்திய விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன

சென்னை: மாயமான இந்திய விமானி அபிநந்தன் சென்னையை சேர்ந்தவர் என முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன.

புல்வாமா தாக்குதலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தான் எல்லைக்குள் நேற்று காலை புகுந்த இந்திய விமானப் படை அங்குள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. அதில், 300-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், 2 பாகிஸ்தான் விமானங்கள் இந்திய எல்லைக்குள் உள்ள காஷ்மீரின் நவ்ஷாரா பகுதியில் அத்துமீறி நுழைந்தது. இதில் ஒரு விமானத்தை நமது வீரர்கள் சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், இந்திய விமானங்கள் பாகிஸ்தான் பகுதிக்குள் அத்துமீறி நுழைந்ததாகவும் அதில் ஒரு விமானத்தை சுட்டு வீழ்த்தியதாகவும், அதிலிருந்த விமானிகள் இருவர் உயிருடன் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பாகிஸ்தான் தெரிவித்தது. இதனை இந்தியா திட்டவட்டமாக மறுத்த நிலையில், கைது செய்யப்பட்ட விமானி இவர் தான், (பெயர் அபிநந்தன்) என்ற வீடியோ ஒன்றை பாகிஸ்தான் வெளியிட்டது. மேலும் மற்றொரு விமானி படுகாயமடைந்துள்ளதால் அவர் சிகிச்சை  பெற்று வருவதாகவும் அந்நாடு தெரிவித்துள்ளது.

ஆனால், இதனை இந்தியா தட்டவட்டமாக மறுத்தது. இந்திய போர் விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் கூறியதில் உண்மை இல்லை என்று இந்திய விமானப் படை தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், பாகிஸ்தான் விமானத்துக்கு ‘மிக்’ ரக விமானம் மூலம் பதிலடி கொடுத்த இந்திய விமானி ஒருவர் திரும்பவில்லை எனவும் விமானப்படை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

iaf jet

இதனைத் தொடர்ந்து, ராணுவ நடவடிக்கைகள், விமானப்படை தாக்குதல் குறித்து செய்தியாளர்களை சந்தித்த மத்திய வெளியுறவுத்துறை செயலாளர் ரவீஷ் குமார், இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் போர் விமானங்கள் அத்துமீறி நுழைந்தன. பாதுகாப்பு படையின் தகுந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் பாகிஸ்தானின் தாக்குதல் முறியடிக்கப்பட்டது. இந்த சண்டையில், பாகிஸ்தானின் ஒரு போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது என்றார்.

மேலும், இந்திய விமானப்படையில் மிக் 21 பைசன் ரக விமானத்தை விமானியுடன் காணவில்லை எனும் தகவலை உறுதிபடுத்திய அவர், காணாமல் போன இந்திய விமானி தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாக பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான கூறுகளை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். மாயமான விமானியின் நிலை குறித்த உண்மை நிலையை அறிய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்று விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், மாயமான இந்திய விமானி விங் கமாண்டர் அபிநந்தன் வர்த்தமான் சென்னையை சேர்ந்தவர் எனவும், இவரின் சர்வீஸ் எண் 27981, இவர் 173 கோர்ஸ் பிரிவை சேர்ந்தவர் எனவும் முதற்கட்ட தகவல்கள் வெளியாகியுள்ளன. இவரது தந்தை பெயர் வர்த்தமான் ஏர்மார்ஷலாக இருந்து ஓய்வு பெற்றவர்.

அபிநந்தன் படித்தது, விமானப்படைக்கு முதற்கட்ட பயிற்சி எடுத்தது எல்லாம் சென்னையில் தான். அதன்பின் வட மாநிலங்களில் பல இடங்களில் பணியாற்றி இருக்கிறார். அபிநந்தனின் பூர்வீகம் திருண்ணாமலை செய்யாறு அடுத்த திருப்பனமூர் கிராமம். இவருக்கு இரண்டு குழந்தைகள் இருக்கிறார்கள். இவரது குடும்பத்தினர் சென்னை மாடம்பாக்கத்தில் வசித்து வருகின்றனர். பாகிஸ்தான் பிடியில் உள்ள அபிநந்தனை விரைவில் மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் வலியுறுத்தியுள்ளனர்.