பலியான வீரர்கள்: நெகிழ்கிறது பாரதம்… குவிகிறது உதவிகள்

 

பலியான வீரர்கள்: நெகிழ்கிறது பாரதம்… குவிகிறது உதவிகள்

புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவ ரிலையன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. அதேபோல மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

சென்னை: புல்வாமா தாக்குதலில் மரணமடைந்த ராணுவ வீரர்களுக்கு உதவ ரிலையன்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. அதேபோல மரணமடைந்த வீரர்களின் குடும்பத்துக்கு தலா 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.

புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம், உயிரிழந்த வீரர்களின் குழந்தைகளுக்கான படிப்பு மற்றும் வேலைக்கான முழு பொறுப்பையும் ஏற்றுக்கொண்டுள்ளது. அத்தோடு அவர்களின் குடும்பங்களின் வாழ்வாதாரங்களுக்கான முழு பொறுப்பையும் ரிலையன்ஸ் நிறுவனம் ஏற்க முன் வந்துள்ளது. தேவைப்பட்டால் காயமடைந்த வீரர்களுக்கு எங்களின் மருத்துவமனை மூலம் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை அளிக்க தயாராக இருக்கிறோம். அரசாங்கத்துக்குத் தோள்கொடுக்கும் வகையில், ராணுவ வீரர்களுக்கான இச்சேவையை எங்கள் கடமையாக கருதிகிறோம் என ரிலையன்ஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு உயிரிழந்த அனைத்து வீரர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிதியுதவி கொடுப்பதாக அறிவித்துள்ளார். வீரர்களை பறிகொடுத்து மீளா துயரத்தில் வாடும் அவர்களின் குடும்பத்தாருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கெனவே 2 தமிழக வீரர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.25 லட்சம் நிவாரண உதவியாக அளிக்கப்படும் என்றும் அவரது மனைவி அல்லது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை தரப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த வீரர்கள் இதில் வீரமரணம் எய்தியிருப்பதால் நாடே சோகக் கடலில் கண்ணீரில் மூழ்கியுள்ளது. இந்நிலையில் இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து ஆதரவுக் கரம் நீள்வது ஆறுதலாக உள்ளது.