பயப்படாதீங்க… வெளியே போகாதீங்க.. வீட்டுக்கே அத்தியாவசிய பொருட்கள் வரும்…. யோகி ஆதித்யநாத் உறுதி

 

பயப்படாதீங்க… வெளியே போகாதீங்க.. வீட்டுக்கே அத்தியாவசிய பொருட்கள் வரும்…. யோகி ஆதித்யநாத் உறுதி

உத்தர பிரதேசத்தில் அத்தியாவசிய பொருட்களை வீட்டுக்கே கொண்டு தரும் திட்டம் உள்ளதால் பயப்பட வேண்டிய அல்லது வெளியே செல்ல வேண்டிய அவசியமில்லை என அம்மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் உறுதி அளித்துள்ளார்.

தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி இன்று முதல் 21 நாட்களுக்கு நாடு முழுவதும் முழு முடக்கத்தை அறிவித்தார். எதிர்பாராத இந்த அறிவிப்பால் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

வீட்டு வாசலுக்கே டெலிவரி

இந்நிலையில் வீடுகளுக்கு நேரடியாக அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்படும் என உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். நேற்று பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு உரையாற்றி முடிந்த அடுத்த சில நிமிடங்களில் முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடுகளுக்கு அத்தியாவசிய பொருட்கள் வழங்கும் திட்டம் உள்ளதாக தெரிவித்தார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

அத்தியாவசிய பொருட்கள்

காய்கறி, பால் மற்றும் மருந்து உள்ளிட்ட அத்தியாவசியமான பொருட்கள் நம்மிடம் போதுமான அளவில் உள்ளது என்பதை 23 கோடி உத்தர பிரதேச மக்களுக்கு உறுதி அளிக்க விரும்புகிறேன். உங்களது மற்றும் உங்களது குடும்பத்தினரின் பாதுகாப்புக்காக வீட்டை விட்டு வெளியே வராதீர்கள். சமூக விலகலை தொடர்ந்து கடைபிடியுங்கள்.நாளை (இன்று) முதல் காய்கறிகள், பால், பழங்கள், மருந்து மற்றும் இதர அத்தியாவசிய பொருட்கள் வீட்டு வாசலுக்கே கொண்டு வழங்கப்படும். இதற்காக 10 ஆயிரம் வாகனங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது. எனவே நீங்க அத்தியாவசிய பொருட்களை வாங்க சந்தைக்கு செல்ல வேண்டாம் என நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்தார்.