பத்திரிகை ஆசிரியர் கொலை வழக்கு; பெண் கைது-பகீர் பின்னணி!

 

பத்திரிகை ஆசிரியர் கொலை வழக்கு; பெண் கைது-பகீர் பின்னணி!

பத்திரிகை ஆசிரியர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பெண் ஒருவரையும், அச்சு பணிகள் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரையும் தானே போலீசார் கைது செய்துள்ளனர்

மும்பை: பத்திரிகை ஆசிரியர் கொலை வழக்கில் திடீர் திருப்பமாக பெண் ஒருவரையும், அச்சு பணிகள் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் ஒருவரையும் தானே போலீசார் கைது செய்துள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில் செய்தி இணையதளம் மற்றும் மாத இதழ் ஒன்றின் ஆசிரியர் நித்யானந் பாண்டே (44). கடந்த 15-ம் தேதி முதல் இவரை காணவில்லை என்ற புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்த தானே போலீசார், கடந்த சனிக்கிழமையன்று அவரது சடலத்தை பிவாண்டி பகுதியில் உள்ள மேம்பாலம் ஒன்றின் கீழ் கண்டெடுத்தனர்.

கொலையாளிகள் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரித்து வந்த தானே போலீசார், பாண்டே நடத்தி வந்த செய்தி இணையதளத்தில் பயிற்சி மாணவியாக பணி புரிந்து வந்த பெண் ஒருவரையும், அச்சு பணிகள் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ் மிஸ்ரா என்பவரையும் கைது செய்துள்ளனர்.

போலீசார் அளித்துள்ள தகவலின் படி, அப்பெண்ணுக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக பாண்டே தொடர்ந்து பாலியல் தொல்லைகள் கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதற்கு எதிராக அப்பெண் குரல் எழுப்பியும் எந்த பலனும் இல்லாமல் போயுள்ளது. இதற்கு முடிவு கெட்ட நினைத்த அப்பெண், அச்சு பணிகள் செய்யும் நிறுவனத்தின் உரிமையாளர் சதீஷ் மிஸ்ராவின் உதவியை நாடியுள்ளார். ஏற்கனவே, அச்சிடுவதற்குக் கட்டணம் செலுத்தாமல் தனக்கு கடன் பாக்கி வைத்துள்ள பாண்டே மீது கோபத்தில் இருந்த மிஸ்ரா, இந்த சதித்திட்டத்துக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

இவர்கள் இருவரும் பாண்டேவை கடந்த வெள்ளிகிழமையன்று வெளியே அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவருக்கு மதுபானத்தில் மயக்க மருந்துகளை கலந்து கொடுத்துள்ளனர். இதையடுத்து மயக்கமடைந்த பாண்டேவின் கழுத்தை நெரித்து இருவரும் கொலை செய்து சடலத்தை மேம்பாலத்தில் கீழ் வீசிச் சென்றுள்ளதாக தெரிகிறது. அவர்கள் இருவரையும் கைது செய்துள்ள போலீசார் அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.