பணியாளர்கள் புத்துணர்வுடன் பணியாற்ற 5 நிமிஷம் யோகா பிரேக்…… மத்திய அரசின் புதிய முயற்சி

 

பணியாளர்கள் புத்துணர்வுடன் பணியாற்ற 5 நிமிஷம் யோகா பிரேக்…… மத்திய அரசின் புதிய முயற்சி

பணியாளர்கள் மன அழுத்தம் இல்லாமல் மற்றும் புத்துணர்வுடன் வேலைபார்க்க பணிபுரியும் இடத்தில் 5 நிமிடம் செய்யும் வகையில் எளிதான யோகா பயிற்சிகளை ஆயுஷ் அமைச்சகம் வடிவமைத்துள்ளது.

இன்றை அவசர உலகில் நாம் அனைவருமே பரபரப்பாக இயங்கி கொண்டிருக்கிறோம். பணியாற்றும் இடத்தில் கடுமையான வேலை காரணமாக பலருக்கு மன அழுத்தம் ஏற்படுகிறது. அயராத உழைப்பு காரணமாக சீக்கிரமாகவே பணியாளர்கள் சோர்ந்து விடுகின்றனர். இதற்கு தீர்வு காணும் வகையில், பிரபலமான யோகா நிபுணர்களின் ஆலோசனைகளுடன் மொராஜி தேசாய் தேசிய யோகா பயிலகம் வாயிலாக 5 நிமிடம் செய்யும் வகையில் எளிமையான யோகா பயிற்சிகளை ஆயுஷ் அமைச்சகம் வடிவமைத்துள்ளது. கடந்த திங்கட்கிழமையன்று யோகா பிரேக் நெறிமுறைகளின் சோதனையை அறிமுகம் செய்தது. மேலும், பெரு நிறுவனங்களில் யோகா பிரேக்கை அமல்படுத்தும்படி பிக்கி உள்ளிட்ட நிறுவன அமைப்புகளுக்கு ஆயுஷ் கடிதம் எழுதியுள்ளது.

ஆயுஷ் அமைச்சகம்

இது குறித்து ஆயுஷ் அமைச்சகம் கூறுகையில், யோகா பிரேக் என்பது யோகாவின் ஒரு பாடம் அல்ல. ஆனால் அது மிகவும் சுருக்கமான அறிமுகம். யோகா நெறிமுறைகளை உருவாக்கும் பணிகள் 3 மாதத்துக்கு முன்பே தொடங்கியது. 10 யோகா பயிற்சியாளர்கள் மற்றும் நிபுணர்கள் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளனர். இந்த பயிற்சியின் ஒரு பகுதியாக, ஒரு கையெடு வழங்கப்படும் மற்றும் நிறுவனங்களில் யோகா பயிற்சி நிலைகளை வெளிப்படுத்தும் திரைப்படம் காண்பிக்கப்படும். இந்த சோதனை முயற்சியில் டாடா கெமிக்கல்ஸ், ஆக்சிஸ் வங்கி உள்பட 15 பெறுநிறுவனங்கள் தாங்களாகவே முன்வந்து இணைந்துள்ளனர் என தெரிவித்தது. 

யோகா பயிற்சி

கார்ப்பரேட் துறையில் பணிபுரிபவர்கள் அதிக மனஅழுத்தத்தை அனுபவிக்கின்றனர். அவர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கவும், தங்களை புத்துணர்வு செய்து கொள்ளவும் தங்களது உற்பத்தி திறனை அதிகரித்து கொள்ளவும் இந்த மாடல் பயிற்சி (5 நிமிட யோகா) பெரிதும் உதவியாக இருக்கும் என ஆயுஷ் அமைச்சகத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். விரைவில் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் அட்டவணையில் யோகா பிரேக் இடம் பிடிக்கும என எதிர்பார்க்கப்படுகிறது.