படுகுழியில் விழுந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி! மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவு சிதைகிறதா?

 

படுகுழியில் விழுந்த மொத்த உள்நாட்டு உற்பத்தி! மோடியின் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார கனவு சிதைகிறதா?

கடந்த செப்டம்பர் காலாண்டில் நம் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

கடந்த சில காலாண்டுகளாக இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி நிலவரம் மிகவும் கவலையளிப்பதாக உள்ளது. நுகர்வோர் செலவினங்களை சுருக்கி வருவது, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, தொழில்துறை உற்பத்தி சரிவு மற்றும் ஏற்றுமதி குறைந்தது போன்ற பல்வேறு காரணங்களால் பொருளாதார வளர்ச்சியில் தேக்க நிலை ஏற்பட்டது. இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 5 சதவீதமாக குறைந்தது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

பொருளாதார மந்தநிலை தொடர்ந்து நீடிப்பதால் இரண்டாவது காலாண்டிலும் வளர்ச்சி (கடந்த செப்டம்பர் காலாண்டு) குறைவாகவே இருக்கும் என பல்வேறு பொருளாதார நிபுணர்கள் கணித்து இருந்தனர். மத்திய அரசு நேற்று கடந்த செப்டம்பர் காலாண்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டது. நிபுணர்களின் கணிப்பு உண்மையானது. அந்த காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 4.5 சதவீதமாக குறைந்துள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி

பொருளாதார வளர்ச்சி மோசமாக உள்ளது என ஏற்கனவே எதிர்க்கட்சிகள் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசை கடுமையாக தாக்கி வருகின்றன. இந்நிலையில் கடந்த செப்டம்பர் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கடும் சரிவு கண்டு இருப்பது மத்திய அரசுக்கு பெரும் கவலையளித்துள்ளது. மேலும், 2024ம் ஆண்டுக்குள் 5 லட்சம் கோடி டாலர் பொருளாதார பலம் என்ற பிரதமர் மோடியின் கனவுக்கும் இது பெரிய ஆப்பை வைத்துள்ளது. அதேசமயம், பொருளாதார வளர்ச்சி சரிவு விவகாரத்தை எதிர்க்கட்சிகள் இனி தீவிரமாக கையில் எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.