பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா! 

 

பஞ்சவடி ஆஞ்சநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா! 

பஞ்சவடி ஆஞ்ஜநேயர் கோயிலில் வருகின்ற ஜனவரி 5 ஆம் தேதி சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி விழா வெகு விமர்சையாக நடைபெறுகிறது . இக்கோயிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு 15 ஆயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் நடைபெறுகிறது.

புதுச்சேரி : 

 புதுச்சேரியில் இருந்து திண்டிவனம்செல்லும் சாலையில் அமைந்துள்ளது பஞ்சவடி திருத்தலம். பஞ்சவடி திருத்தலத்தில் தான் ஆஞ்ஜநேயர் பஞ்சமுகத்தில் 36 அடி உயரத்தில் விஸ்வரூப தரிசனத்தில் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றார். 

panjavadi

இத்திருத்தலத்தில் தான் வாயுவின் மைந்தனான ஆஞ்சநேயர் மயில் ராவணன் நடத்தும் யாகத்தை தடுத்து நிறுத்த கிளம்பும் முன் நரசிம்மர், ஹயக்கிரீவர்,கருடன்,வராகமூர்த்தி ஆகியோரை வணங்கி ஆசி பெற்றார். 

தங்களிடம் ஆசி பெற்ற ஆஞ்சநேயர் இந்த புனிதப் பணியில் வெற்றி பெற அந்தந்தக் கடவுளர்கள் தங்களின் உருவ வடிவின் சக்தியை அளித்தனர். இதன் மூலம் ஆஞ்சநேயர் பஞ்சரூபத்தில் விஸ்வரூபம் எடுத்தார். 

hanuman

இப்படி பஞ்சமுகத்தில் விசேஷ அவதாரம் எடுத்ததனால் பக்தர்களின் தீர்க்க முடியாத குறைகளையும் தீர்த்து வைக்கும் அருளாற்றல் கொண்டவராக இத்தலத்தில் பஞ்சமுக ஆஞ்சநேயர் விளங்குகிறார். 

பஞ்சவடி ஆஞ்ஜநேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா ஆண்டுதோறும் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம் . அதே போல் அனுமன் ஜெயந்தி மகோற்சவம் நேற்று துவங்கியது.

நேற்று மாலை பகவத் பிரார்த்தனை,அனுக்ஞை,மகா சங்கல்பம், புண்யாஹவாசனம், ம்ருத்ஸங்க்ரஹணம், அங்குரார்ப்பணம், வாஸ்து சாந்தி ஆகிய பூஜைகள் நடைபெற்றது.

hanuman

மூலமந்திர ஹோமம் மற்றும் லட்சார்ச்சனை இன்று காலை துவங்கியது வருகின்ற 5ம் தேதி சனிக்கிழமை அனுமன் ஜெயந்தி மகோற்சவம் நடைபெறுகிறது . அன்றைய தினம் காலை 8:30 மணிக்கு 2 ஆயிரம் லிட்டர் பால் அபிஷேகம் மற்றும் ஆராதனைகளும் அதனையடுத்து லட்சார்ச்சனை பூர்த்தியும் நடைபெறுகிறது. 

அதனையடுத்து மாலை 4:00 மணிக்கு சீதாராம திருக்கல்யாணம் நடைபெறுகிறது. அன்றையதினம் மதியம் 12:00 மணியளவில் 15 ஆயிரம் பக்தர்களுக்கு தலைவாழை இலை போட்டு, அறுசுவை உணவு பரிமாறுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை பஞ்சமுக ஜெயமாருதி சேவா டிரஸ்ட் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.