பசுமை பட்டாசு விவகாரத்தால் சிவகாசி பட்டாசு நிறுவனங்களுக்கு ரூ.800 கோடி இழப்பு

 

பசுமை பட்டாசு விவகாரத்தால் சிவகாசி பட்டாசு நிறுவனங்களுக்கு ரூ.800 கோடி இழப்பு

பசுமை பட்டாசு விவகாரத்தால் சிவகாசி பட்டாசு நிறுவனங்களுக்கு ரூ.800 கோடி வருவாய் இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவின் குட்டி ஜப்பான் என்று அழைக்கப்படும் நகரம் சிவகாசி. பட்டாசு மற்றும் அச்சு தொழிலுக்கு பெயர் பெற்றது. சிவகாசியிலிருந்து பல்வேறு மாநிலங்கள் மற்றும் நாடுகளுக்கு பட்டாசு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த அமைப்புசார துறையில் சுமார் 2 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தீபாவளி சமயத்தில் சிவகாசி பட்டாசு துறை சுமார் ரூ.2,000 கோடி அளவுக்கு வருவாய் பார்க்கும்.

பட்டாசு கடை

இந்நிலையில், கடந்த ஆண்டு பட்டாசுகளுக்கு தடை விதிக்கக்கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், பட்டாசு வெடிப்பது மற்றும் உற்பத்தி போன்றவற்றில் சில மாற்றங்கள் செய்து உத்தரவிட்டது. இதனால் நாடு முழுவதும் பட்டாசு விற்பனை வழக்கமான அளவில் நடைபெறவில்லை. இதனால் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்கள் பாதிக்கப்பட்டனர். 

இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டில் சிவகாசி பட்டாசு தயாரிப்பாளர்களுக்கு ரூ.800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு பட்டாசு மற்றும் அமோர்ஸ் சங்கத்தின் தலைவர் பி.கணேசன் கூறுகையில், கடந்த மார்ச் மாதத்தில்தான் பசுமை பட்டாசு குறித்து உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியது. அது போன்ற பட்டாசுகளை தயாரிக்க பெரிதும் உதவியாக இருந்தது. இருப்பினும் இந்த ஆண்டின் முதல் 4 மாதங்கள் தயாரிப்பில் ஈடுபடாததால் சுமார் ரூ.800 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது என தெரிவித்தார்.

பசுமை பட்டாசு அறிமுகம்

கடந்த சில தினங்களுக்கு முன் அறிவியல் மற்றும் தொழில் ஆராய்ச்சிக்கான கவுன்சில் மேம்படுத்திய சுற்றுப்புறச்சூழலுக்கு உகந்த பசுமை பட்டாசுகளை மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.