பங்கு வர்த்தகத்தை சிதைத்த பொருளாதார வீழ்ச்சி! ரூ.2.61 லட்சம் கோடி காலி…..

 

பங்கு வர்த்தகத்தை சிதைத்த பொருளாதார வீழ்ச்சி! ரூ.2.61 லட்சம் கோடி காலி…..

இந்த வாரத்தின் முதல் வர்த்தக தினமான இன்று பங்குச் சந்தைகளில் வர்த்தகம் மிகவும் கொடூரமாக இருந்தது. சென்செக்ஸ் 770 புள்ளிகள் குறைந்தது.

இந்த நிதியாண்டின் முதல் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 5 சதவீதமாக குறைந்தது. கடந்த ஜூலை மாதத்தில் 8 முக்கிய துறைகளின் வளர்ச்சி 2.1 சதவீதமாக சரிந்தது. மேலும் வர்த்தகத்தின் இடையே அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் வெளிமதிப்பு வீழ்ந்தது. அன்னிய  முதலீட்டாளர்கள் இந்திய பங்குச் சந்தைகளில் மேற்கொண்ட முதலீட்டை திரும்ப பெற தொடங்கியது போன்ற காரணங்களால் இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் கடும் வீழ்ச்சி கண்டது.

பங்கு வர்த்தகம்

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில், டெக் மகிந்திரா மற்றும் எச்.சி.எல். டெக்னாலஜிஸ் ஆகிய 2 நிறுவன பங்குகளின் விலை மட்டுமே உயர்ந்தது. அதேவேளையில், டாடா மோட்டார்ஸ், டாடா ஸ்டீல், ஆக்சிஸ் வங்கி, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் எல் அண்டு டி உள்பட 28 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

மும்பை பங்குச் சந்தையில் இன்று 817 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது.  1,613 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. இருப்பினும் 178 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.138.35 லட்சம் கோடியாக சரிந்தது. கடந்த வெள்ளிக்கிழமையன்று பங்கு வர்த்தகம் முடிவடைந்தபோது நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.140.98 லட்சம் கோடியாக இருந்தது.

பங்கு வர்த்தகம்

இன்றைய பங்கு வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 769.88 புள்ளிகள் வீழ்ந்து 36,562.91 புள்ளிகளில் முடிவுற்றது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 225.35 புள்ளிகள் சரிந்து 10,797.90 புள்ளிகளில் நிலை கொண்டது.