பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம்… சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்தது.

 

பங்குச் சந்தையில் முதலீட்டாளர்களுக்கு ரூ.8 ஆயிரம் கோடி நஷ்டம்… சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் படுத்தது. சென்செக்ஸ் 25 புள்ளிகள் குறைந்தது.

இந்திய பங்குச் சந்தைகளில் இன்று வர்த்தகம் ஒரு நிலையில்லாமல் இருந்தது. கொரோனா வைரஸ் தொற்று நோயால் இந்த ஆண்டில் சர்வதேச அளவில் பொருளாதாரத்தில் 8.8 லட்சம் கோடி அமெரிக்க டாலர் வரை இழப்பு ஏற்படும் என ஆசிய மேம்பாட்டு வங்கி கணித்துள்ளது. கொரோனாவுக்கு எதிரான இந்தியாவின் யுத்தத்துக்கு சுமார் ரூ.7,600 கோடி வழங்க ஆசிய மேம்பாட்டு வங்கி ஒப்புதல் அளித்தது. மணப்புரம் பைனான்ஸ் உள்ளிட்ட சில நிறுவனங்களின் நிதி நிலை முடிவுகள் சிறப்பாக இருந்தது இது போன்ற செய்திகளால் பங்கு வர்த்தகம் ஏற்ற இறக்கமாக இருந்தது. இறுதியில் சிறிய சரிவுடன் பங்கு வர்த்தம் முடிவடைந்தது.

ஆசிய மேம்பாட்டு வங்கி

சென்செக்ஸ் கணக்கிட உதவும் 30 நிறுவன பங்குகளில், பார்தி ஏர்டெல், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி., ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், இந்துஸ்தான் யூனிலீவர் மற்றும் நெஸ்லே இந்தியா உள்பட மொத்தம் 10 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. மகிந்திரா அண்டு மகிந்திரா, ஆக்சிஸ் வங்கி, ஹீரோமோட்டோகார்ப், இண்டஸ்இந்த் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி, பஜாஜ் பைனான்ஸ் மற்றும் டி.சி.எஸ். உள்பட மொத்தம் 20 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது.

பார்தி ஏர்டெல்

மும்பை பங்குச் சந்தையில் இன்று 1,086 நிறுவன பங்குகளின் விலை உயர்ந்தது. 1,230 நிறுவன பங்குகளின் விலை குறைந்தது. 177 நிறுவன பங்குகளின் விலையில் எந்தவித மாற்றமும் இன்றி முடிவடைந்தது. மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் பங்குகளின் மொத்த சந்தை மதிப்பு ரூ.122.62 லட்சம் கோடியாக குறைந்தது. ஆக, இன்று முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தையில் ஒட்டு மொத்த அளவில் ரூ.8 ஆயிரம் கோடியை இழந்தனர். 

பங்கு வர்த்தகம்

இன்றைய வர்த்தகத்தின் முடிவில், மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 25.16 புள்ளிகள் சரிந்து 31,097.73 புள்ளிகளில் நிலைகொண்டது. தேசிய பங்குச் சந்தையின் குறியீட்டு எண் நிப்டி 5.90 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 9,136.85 புள்ளிகளில் முடிவுற்றது.