நெல் ஜெயராமன் மறைவு விவசாயிகளுக்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

 

நெல் ஜெயராமன் மறைவு விவசாயிகளுக்கு பேரிழப்பு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

நெல் ஜெயராமன் மறைவு ஒட்டுமொத்த விவசாய மக்களுக்கும் பேரிழப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்

சென்னை: நெல் ஜெயராமன் மறைவு ஒட்டுமொத்த விவசாய மக்களுக்கும் பேரிழப்பு என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இயற்கை வேளாண் விஞ்ஞானி எனப்போற்றப்படும் நெல் ஜெயராமன், புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை 5.10 மணியளவில் நெல் ஜெயராமன் காலமானார்.

அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள், இயற்கை ஆர்வலர்கள், விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், நெல் ஜெயராமன் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய திமுக தலைவர் ஸ்டாலின், ஒவ்வொரு ஆண்டும் நெல் திருவிழா நடத்தி இளைஞர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் நெல் ஜெயராமண். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கல். அவரது மறைவு ஒட்டுமொத்த விவசாய மக்களுக்கும் பேரிழப்பு என தெரிவித்துள்ளார்.

பாரம்பரிய நெல் வகைகளை காப்பாற்றியதற்காக மாநில, தேசிய விருதுகளை நெல் ஜெயராமன் பெற்றிருக்கிறார். நெல் ஜெயராமன் 174 அரியவகை  நெல் வகைகளை சேகரித்ததுடன், மரபணு மாற்ற விதை திட்டங்களுக்கு எதிராகவும் நெல் ஜெயராமன் குரல் கொடுத்து வந்தார்.

ஆண்டுக்கொரு முறை தனது ஆதிரெங்கம் கிராமத்தில் நெல் திருவிழா நடத்தி இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகத்தின் பல நாடுகளிலிருந்து பல்வேறு ஆய்வாளர்களை அதில் பங்கேற்கச் செய்து அவர்கள் மூலம் விவசாயிகள், இயற்கை ஆர்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்களுக்குப் பயிற்சி அளித்து விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வந்தார்.