நெல் ஆடிய நிலம் எங்கே? சோற்றை தேடி சோழ நாட்டு பிள்ளைகளின் கதறல் – உருக வைக்கும் வீடியோ

 

நெல் ஆடிய நிலம் எங்கே? சோற்றை தேடி சோழ நாட்டு பிள்ளைகளின் கதறல் – உருக வைக்கும் வீடியோ

அறம் தப்பாமல் மீண்டும் தங்கள் கைகளால் உலகுக்கு உணவளிக்கத்தான் போகிறார்கள்.

கஜா புயல் டெல்டா மாவட்டங்களை தனது அசுர கரங்களால் அலசி போட்டிருக்கிறது. கஜா கடந்து சென்ற பாதை எங்கும் தனது ருத்ர தாண்டவ தடயத்தை மிக அழுத்தமாக பதித்து சென்றுள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்களில் தென்னை, வாழை, சவுக்கு, நெற்பயிர் முற்றிலும் அழிந்து வாழ்வாதாரம் கால் நூற்றாண்டுக்கு பின்னால் சென்றுள்ளது. உணவு, உடை, இருப்பிடம் என எந்த அடிப்படை வசதிகளும் இல்லாமல் புயல் கரையை கடந்து 10 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் அனைவரும் சொந்த ஊரிலேயே அகதிகளாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், புயல் பாதித்த டெல்டா பகுதியில் நிவாரண உதவி வழங்க தன்னார்வலர்கள் ஒரு வண்டியில் சென்றுள்ளனர். அப்போது பொருட்கள் முடிவடைந்துவிட்டதால் அவர்கள் அங்கிருந்து கிளம்பினர். ஆனால் பசியின் பிடியில் வாடிய மக்கள், புறப்பட்ட வாகனத்தின் பின்னாலேயே கையை ஏந்தியபடி ஓடி வந்தனர். அதில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் அதிகம். தங்கள் வாகனத்தின் பின்னால் ஓடி வருபவர்களிடம் தன்னார்வலர்கள், எல்லாம் முடிந்துவிட்டது நாங்கள் திருப்பி வரோம் என்கின்றனர். ஆனால் இளைஞர்கள் கையை ஏந்தியபடி அண்ணே கொடுங்க அண்ணே என ஓடி வரும் வீடியோ காண்போரை கண் கலங்க வைக்கிறது.

விவசாயம் செய்து ஊருக்கே சோறு போட்ட சோழ நாடு என பெயர் பெற்ற டெல்டா மாவட்டங்களின் தற்போதைய நிலை இதுதான். சோறுடைத்த சோழ நாட்டு மக்கள் இப்போது சோற்றுக்கு வழி இல்லாமல் இச்சமூகத்திடம் கையேந்தி நிற்கின்றனர். ஆனால் இச்சமூகத்தாலும், அரசாங்கத்தாலும் அவர்கள் ஒதுக்கப்படுகிறார்களோ என்ற ஐயம் எழுவதை தவிர்க்க முடியவில்லை. 

சோறுடைத்த தெய்வங்கள் அவர்கள். இன்று வாகனத்தின் பின்னால் சோற்றுக்காக ஓடி வரும் இந்த தெய்வங்கள், நிச்சயம் ஒரு நாள் தங்களை இப்படி கையேந்தவிட்ட இச்சமூகம் வெட்கி தலை குனியும் பொருட்டு, வள்ளுவன் கூற்றுக்கிணங்க, 

“இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர்நாண
நன்னயம் செய்து விடல்.” 

என அறம் தப்பாமல் மீண்டும் தங்கள் கைகளால் உலகுக்கு உணவளிக்கத்தான் போகிறார்கள். இப்போது அவர்களுக்கு உதவ முன்வராதவர்கள் அப்போது குற்ற உணர்ச்சியில் நிற்கத்தான் போகிறார்கள்.