நிறுவனத்தை விற்பதற்காக ரூ.50 ஆயிரம் கோடி பாக்கியை அடைத்த டாடா!

 

நிறுவனத்தை விற்பதற்காக ரூ.50 ஆயிரம் கோடி பாக்கியை அடைத்த டாடா!

தனது தொலைத்தொடர்பு சேவை நிறுவனத்தை (டாடா டெலிசர்வீசஸ்) ஏர்டெல் நிறுவனத்துக்கு விற்பனை செய்வதற்காக ரூ.50 ஆயிரம் கோடி பாக்கியை டாடா குழுமம் அடைத்தது.

சர்வதேச அளவில் தொலைத்தொடர்பு துறையில் அதிவேக வளர்ச்சி கண்ட நாடாக இந்தியா விளங்குகிறது. தற்போது நம் நாட்டில் மொபைல் இணைப்புகளின் எண்ணிக்கை 100 கோடியை தாண்டி விட்டது. 2016ம் ஆண்டு முன்பு வரை தொலைத்தொடர்பு துறை பெரிய மாற்றம் ஒன்றும் ஏற்படவில்லை. அந்த ஆண்டின் பிற்பகுதியில் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் இந்திய தொலைத்தொடர்பு துறையில் காலடி வைத்த பிறகு அதிரடி மாற்றங்கள் ஏற்பட்டது.

ஏர்டெல்

அறிமுகமான குறுகிய காலத்திலேயே ஜியோ நிறுவனம் இலவச கால்கள், இன்டர்நெட் என சலுகைகளை வழங்கி கோடிக்கணக்கான வாடிக்கையாளர்களை தன் பக்கம் இழுத்தது. ஜியோவின் அதிரடி போட்டியை சமாளிக்க முடியாமல் பல தொலைத்தொடர்பு துறை நிறுவனங்கள் கடையை மூடின. டாடா குழுமம் தனது தொலைத்தொடர்பு சேவை நிறுவனமான டாடா டெலிசர்வீசஸை (மகாராஷ்டிரா) ஏர்டெல் நிறுவனத்துக்கு விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டது.

டாடா டெலிசர்வீஸ் நிறுவனம் வங்கிகள் மற்றும் மத்திய அரசுக்கு கொடுக்க வேண்டிய பாக்கி தொகையை கொடுத்து விட வேண்டும். அதன் பிறகுதான் டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை வாங்கும் நடவடிக்கை நிறைவேறும் என்று ஏர்டெல் ஒப்பந்தம் போட்டது. இதனையடுத்து வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடன் ரூ.40 ஆயிரம் கோடியை டாடா குழுமம் கட்டி விட்டது.

மொபைல் சேவை

இந்நிலையில் டாடா குழுமத்தின் ஹோல்டிங் நிறுவனமான டாடா சன்ஸ் கடந்த மாதம்  தொலைத்தொடர்பு துறைக்கு ரூ.10 ஆயிரம் கோடியை செலுத்தியது. இது குறித்து டாடா குழுமத்தின் செய்தி தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏர்டெல் நிறுவனத்துக்கு டாடா டெலிசர்வீசஸ் நிறுவனத்தை விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறைவு செய்வதற்காக, திட்டமிட்ட காலத்துக்குள், டாடா டெலிசா்வீசஸ் நிறுவனத்தின் அனைத்து கடன் பொறுப்புகளும் திருப்பி அடைக்கப்பட்டு விட்டது என குறிப்பிட்டு உள்ளார்.