நிர்மலா விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் அரசியல் கட்சியினர் சிக்குவர்; தெரிந்தும் மவுனம் காக்கும் பொன்னார்?

 

நிர்மலா விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் அரசியல் கட்சியினர் சிக்குவர்; தெரிந்தும் மவுனம் காக்கும் பொன்னார்?

நிர்மலா விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் அரசியல் கட்சியினர் சிக்குவர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்

சென்னை: நிர்மலா விவகாரத்தில் உண்மை வெளிவந்தால் அரசியல் கட்சியினர் சிக்குவர் என மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

நிர்மலாதேவி விவகாரம் குறித்து நக்கீரன் இதழில் கட்டுரை வெளியானதால் ஆளுநர் மாளிகை சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் அந்த இதழின் ஆசிரியர் கோபாலை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் சட்டப்பிரிவு 124-A-ன் கீழ் அவர் மீது தேசத்துரோக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவர் தவிர, நக்கீரன் இதழின் இணையதள ஆசிரியர் வசந்த்தும் கைது செய்யப்பட்டு விசாரணை நடத்திய பிறகு விடுவிக்கப்பட்டார். மேலும் அந்த இதழின் முதன்மை ஆசிரியர் தாமோதரன், பொறுப்பு ஆசிரியர் லெனின் மற்றும் தலைமை நிருபர் இளைய செல்வம் ஆகியோரை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் திமுக செயல்தலைவர் விடுத்துள்ள கண்டன செய்தியில், “நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டிருப்பது பத்திரிகை சுதந்திரத்திற்கு பாசிச பாஜகவும், பொம்மை அதிமுகவும் விடுத்திருக்கும் பகிரங்க அச்சுறுத்தல்” என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், சென்னை சூளைமேட்டில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், நக்கீரன் கோபால் கைது செய்யப்பட்டது பற்றி தெரியாது. பத்திரிகை சுதந்திரம் பற்றி பேசவும் பேச்சுரிமை பற்றி கேள்வி கேட்கவும் திமுகவுக்கு தகுதியில்லை என்றார்.

மேலும், நிர்மலா தேவி விவகாரத்தில் ஆளுநரை சிக்க வைக்க சதி நடக்கிறது என குற்றம் சாட்டிய பொன்னார், இந்த விவகாரத்தில் உண்மை வெளியானால் பலரின் அரசியல் வாழ்க்கை கேள்விக்குறியாகும். தகவல்கள் வெளியானால் அரசியல் கட்சியினர் சிக்குவர்  என்றார் அதிரடியாக.

சட்டம் ஒழுங்கு பிரச்னையில் பாஜக என்றுமே தலையிட்டது இல்லை என விளக்கமளித்த மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், ஹெச்.ராஜா, எஸ்.வி சேகரை கைது செய்ய வேண்டாம் என பாஜக கூறியதா எனவும் கேள்வி எழுப்பினார்.

பல்வேறு கனவுகளுடன் கல்லூரிக்கு சென்ற மாணவிகளை தவறான பாதைக்கு வழிநடத்த முயன்ற விவகாரத்தில் பேராசிரியை நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். கல்வியில் முன்னோடி மாநிலமாக திகழும் தமிழகத்தின் எதிர்கால சந்ததியினரின் வாழ்க்கையை கேள்விக்குறியாக்கியிருக்கும் இந்த விவகாரத்தில், உண்மை வெளியானால் அரசியல் கட்சியினர் சிக்குவர் என மத்திய அமைச்சர் ஒருவரே கூறுகிறார் என்றால், இதில் அரசியல் கட்சியினரும் சிக்கியுள்ளனர் என்றே பொருள்படுகிறது. இது தெரிந்தும் மக்கள் பிரதிநிதியான அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், அந்த அரசியல்வாதிகள் மற்றும் உயர் பொறுப்பில் உள்ளவர்களின் முகத்திரையை கிழித்தெறியும் முயற்சியில் ஈடுபடாமல் மவுனம் காப்பது ஏன்? என பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.