நிரூபித்துக் காட்டுங்கள்! பதவியிலிருந்து மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகுகிறேன் – அமைச்சர் வேலுமணி மு.க.ஸ்டாலினுக்கு சவால்

 

நிரூபித்துக் காட்டுங்கள்! பதவியிலிருந்து மட்டுமல்ல, அரசியலில் இருந்தே விலகுகிறேன் – அமைச்சர் வேலுமணி மு.க.ஸ்டாலினுக்கு சவால்

டெல்லி: தன் மீதான ஊழல் புகார்களை நிரூபித்துக் காட்டினால், அரசியலில் இருந்தே விலகி விடுவதாக அமைச்சர் வேலுமணி திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சவால் விடுத்துள்ளார்.

அமைச்சர் வேலுமணி குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் “உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தனது சகோதரரின் நிறுவனங்களுக்கும், தனது உறவினர்களும் நெருங்கிய நண்பர்களும் இயக்குனர்களாக உள்ள நிறுவனங்களுக்கும் அரசு ஒப்பந்தங்களை அள்ளிக்கொடுத்து உள்ளாட்சித்துறையை கொள்ளையாட்சி துறையாக உருக்குலைத்திருப்பது பேரதிர்ச்சியளிக்கிறது. இதுதொடர்பாக தி.மு.க. எம்.பி. ஆர்.எஸ்.பாரதி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளார்.

உள்ளாட்சித் துறையின் கீழ் உள்ள சென்னை, கோவை உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் அமைச்சரின் ஆணைப்படி தான் ஒப்பந்தங்கள் வழங்கப்படுகின்றன. ரூ.942 கோடி உபரிநிதி வைத்திருந்த சென்னை மாநகராட்சி அமைச்சர் எஸ்.பி.வேலுமணியால் இன்றைக்கு ரூ.2,500 கோடி கடனில் மூழ்கியிருக்கிறது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உள்ளிட்ட அனைவர் மீதும் தி.மு.க.வின் சார்பில் ஆதாரங்களுடன் ஊழல் புகார்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

அந்த ஊழல் புகார்களின் மீது லஞ்ச ஊழல் கண்காணிப்புத்துறை உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்காமல், வெட்கமோ அச்சமோ இல்லாமல் ஊழலுக்கு துணைபோனது வேதனையளித்தது. அதனால் ஐகோர்ட்டில் தி.மு.க.வின் சார்பில் வழக்கு தொடரப்பட்டு, இப்போது அந்த ஊழல் புகார்கள் எல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக விசாரணைக்கு வந்துகொண்டிருக்கிறது.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீதான இந்த ஊழல் புகார் மீது ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சட்ட நெறிமுறைகளை பின்பற்றி உடனடியாக நடவடிக்கை எடுத்து அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும்.

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அந்த பதவியில் நீடிப்பதற்கு தார்மீக ரீதியாக சிறிதும் தகுதியற்றவர் என்பதால், ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறையின் நியாயமான நேர்மையான சட்டத்திற்குட்பட்ட வெளிப்படையான விசாரணைக்கு வழி ஏற்படுத்திக்கொடுக்கும் வகையில் அவரை உடனடியாக பதவி நீக்கம் செய்யவேண்டும்” என்று தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு டெல்லியில் அமைச்சர் வேலுமணி பதில் அளித்துள்ளார். இதுதொடர்பாக அவர் பேசுகையில், “உள்ளாட்சி துறைகளின் விதிகளை மீறி யாருக்கும் டெண்டர் கொடுக்கப்படவில்லை. உலக நாடுகளின் பணக்காரர்கள் பட்டியலில் ஸ்டாலின் குடும்பத்தினர் உள்ளனர். என் மீதான குற்றச்சாட்டுகளை நிரூபித்தால், அமைச்சர் பதவியில் இருந்து மட்டுமல்ல. அரசியலில் இருந்தே விலகி விடுகிறேன். அதேசமயம் என் மீதான குற்றச்சாட்டுகளை ஸ்டாலின் நிரூபிக்கா விட்டால் திமுக தலைவர் பதவியில் இருந்து அவர் ராஜினாமா செய்வாரா? அதிமுகவை முடக்க ஸ்டாலின் மேற்கொள்ளும் முயற்சிகள் பலிக்காது. தமிழக உள்ளாட்சித்துறை சிறப்பாக செயல்படுவதாக மத்திய அரசு விருது வழங்கி பாராட்டி வருகிறது” என்று கூறினார்.