நிரவ் மோடி கலைப்படைப்புகள் ரூ.59.37 கோடிக்கு ஏலம்!

 

நிரவ் மோடி கலைப்படைப்புகள் ரூ.59.37 கோடிக்கு ஏலம்!

நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான கலைப்படைப்புகள் ரூ.59.37 கோடிக்கு ஏலம் போயுள்ளது

புதுதில்லி: நாட்டை விட்டு தப்பியோடிய வைர வியாபாரி நிரவ் மோடிக்கு சொந்தமான கலைப்படைப்புகள் ரூ.59.37 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

ரூ.11 ஆயிரத்து 600 கோடிக்கும் அதிகமாக சட்டவிரோத பரிவர்த்தனையும், ரூ.280 கோடி மோசடி செய்ததாகவும் குஜராத்தை சேர்ந்த வைர நகை வியாபாரி நிரவ் மோடி மீது பஞ்சாப் நேஷனல் வங்கி புகார் அளித்தது. ஆனால், அவர் நாட்டை விட்டு கடந்த ஆண்டே வெளியேறி விட்டார். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள், நிரவ் மோடியின் வீடு, அலுவலகங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி பொருட்கள் மற்றும் ஆவணங்களை பறிமுதல் செய்து வருகின்றனர்.

niravmodi

மேலும், அவரை நாடு கடத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ள மத்திய அரசின் கோரிக்கையை ஏற்று, இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்தின் பரிந்துரையின் பேரில் அவர் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில், நிரவ் மோடிக்கு சொந்தமான கலைப்படைப்புகளை வருமானவரித்துறை அதிகாரிகள் மூலம் ஏலம் விடப்பட்டது. இந்த கலைப்படைப்புகள் ரூ.59.37 கோடிக்கு ஏலம் போயுள்ளது. இதன் மூலம், ரூ.54.84 கோடி வருவாயை வருமானவரித்துறை ஈட்டியுள்ளது. மீதமுள்ள தொகை கமிஷன் தொகையாக ஏல நிறுவனத்துக்கு அளிக்கப்பட்டுள்ளது.

niravmodi

அதிகபட்சமாக ஓவியர் வி.எஸ்.கைடோன்டேவின் படைப்புகள் ரூ.25.24 கோடிக்கு ஏலம் போனது. கடந்த 2015-ஆம் ஆண்டில் இவரது படைப்பு ரூ.29.3 கோடிக்கு ஏலம் போனது. அதுவே கலைப்படைப்பு ஒன்று நாட்டிலேயே அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டதாகும். அதனை ஒப்பிடும் போது அவரது படைப்பு தற்போது குறைந்த விலைக்கே ஏலம் போயுள்ளது. அதேபோல், ராஜா ரவி வர்மாவின் 1881-ஆம் ஆண்டு படைப்பு ரூ.16.10 கோடிக்கு ஏலம் போயுள்ளது.

incometax

மும்பையில் நடைபெற்ற ஏல நிகழ்வில் நேரடியாகவும், செல்போன் மற்றும் ஆன்லைன் மூலமாகவும் கலை ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். ரூ.20 கோடி வரை ஏலம் எடுப்பவர்கள் 15 சதவீத பிரீமியம் தொகையை கட்ட வேண்டும். அந்த தொகையை தாண்டும் பட்சத்தில் 12 சதவீத பிரீமியம் தொகையை கட்ட வேண்டும். இந்த தொகை ஏல நிகழ்வு நடைபெற்ற கலைக்கூடத்துக்கு சென்று விடும். அரசு நிறுவனம் ஒன்று கலைப்படைப்புகளை தொழில்முறை கலைக்கூடம் மூலம் ஏலம் விடுவது இதுவே முதன்முறையாகும். இந்த ஏலத்தின் மூலம் ரூ.97 கோடி ஈட்ட வருமானவரித்துறை திட்டமிட்டிருந்த நிலையில், குறைவான தொகையையே ஈட்ட முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் வாசிங்க

நம்பர் ப்ளேட்டோடு சவுகிதார் சேர்த்ததால் அபராதம் கட்டிய பாஜக எம்.எல்.ஏ