நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு இடைக்கால தடை

 

நியூட்ரினோ ஆய்வு மையத்திற்கு இடைக்கால தடை

தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை: தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் இடைக்கால தடை விதித்துள்ளது.

தேனி மாவட்டம் தேவாரம் அருகே உள்ள பொட்டிபுரம் என்ற ஊரில் இருக்கும் மேற்கு தொடர்ச்சி மலையின் உள்ளே நியூட்ரினோ ஆய்வு மையம் அமைக்க மத்திய அரசு திட்டமிட்டு அதற்கான ஆய்வு பணிகளை மேற்கொண்டுள்ளது. இதற்கான அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கியுள்ளது.

ஆனால் இந்த திட்டத்தை செயல்படுத்தினால் தமிழகத்தின் சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படும் என பொதுமக்கள் அரசியல் கட்சியினர் என பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், நியூட்ரினோ திட்டத்துக்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய அனுமதியை எதிர்த்து, பூவுலகின் நண்பர்கள் என்ற அமைப்பை சேர்ந்த சுந்தர்ராஜன், தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

இந்த வழக்கை இன்று விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் தேனியில் நியூட்ரினோ ஆய்வு மையம் அமைப்பதற்கு இடைக்காலத்தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும் வனவிலங்கு  வாரியம் மீண்டும் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் எனவும், கூடுதல் ஆய்வுகள் மேற்கொண்ட பிறகே முழுமையாக ரத்து செய்வது குறித்து முடிவெடுக்க முடியும் எனவும் கூறியுள்ளது.