நாளை முதல் மதுபான கடைகள் திறப்பு… குடிமகன்கள் மகிழ்ச்சி… கோவா மதுபான வர்த்தகர்கள் கவலை…

 

நாளை முதல் மதுபான கடைகள் திறப்பு… குடிமகன்கள் மகிழ்ச்சி… கோவா மதுபான வர்த்தகர்கள் கவலை…

மது கடைகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது கோவா மதுபான வர்த்தகர்களுக்கு சந்தோஷம் என்றாலும், ஸ்டாக் இருக்கும் பீர்கள் 8 நாட்களுக்குள் காலியாகி விடும் என்பதால் பற்றாக்குறை ஏற்படும் என்ற கவலையில் அவர்கள் உள்ளனர்.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக இருக்கும் சீல் வைக்கப்பட்ட பகுதிகளை தவிர்த்து மற்ற பகுதிகளில் மது கடைகளை நாளை முதல் திறக்க மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதனால் சுமார் 40 நாட்கள் மது அருந்த முடியாமல் தவித்து வந்த குடிமகன்கள் சந்தோஷத்தில் உள்ளனர். அதேசமயம் கோவாவில்,சப்ளை இல்லாததால் கையில் இருக்கும் சரக்குகள் கொஞ்ச நாட்களில் காலியாகி விடுமே என்ற கவலையில் மதுபான வர்த்தகர்கள் கவலையில் உள்ளனர்.

மதுபான கடை

கோவா மதுபான வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் தத்தாபிரசாத் நாயக் கூறியதாவது: கோவாவில் மே 4ம் தேதி (நாளை) விற்பனையை தொடங்கும்போது குறைந்தபட்சம் 1,300 மதுபான கடைகளில் கையிருப்பு நன்றாக இருக்கும். இருப்பினும் கையில் இருக்கும் பீர்கள் 8 முதல் 10 நாட்களில் காலியாகி விடும். மாநில எல்லைகள் மூடப்பட்டுள்ளதால் மற்ற அண்டை மாநிலங்களிலிருந்து சரக்கு சப்ளை பாதிக்கப்பட்டுள்ளது. 

மதுபானம்

சில பிராண்டு விஸ்கிகள் கோவாவில் உற்பத்தி செய்யப்படுகிறது. ஆனாலும் அதற்கான அடிப்படை ஆல்கஹால் வேறுமாநிலங்களிலிருந்து குறிப்பாக உத்தர பிரதேசத்திலிருந்து வருகிறது. தொற்றுநோய் காரணமாக வெளிநாடுகளிலிருந்து மது இறக்குமதி செய்யப்படுவது பாதிக்கப்பட்டுள்ளது. மேலும் இருப்பு இருக்கும் வெளிநாட்டு மதுபானங்களும் 2 மாதங்களில் விற்பனையாகி விடும். மதுபான கடைகள் திறக்கப்பட்டாலும் 70 சதவீத விற்பனை குறையும். ஏனென்றால் மாநிலத்தில் சுற்றுலா தடை செய்யப்பட்டுள்ளது. கோவாவில் மதுஅருந்துவர்களில் பெரும்பாலானவர்கள் சுற்றுலா பயணிகள்,  30 சதவீத சப்ளை மட்டுமே உள்ளூர்வாசிகளுக்கு விற்பனையாகும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.