நாளை நான்காவது ஒருநாள் போட்டி: மாற்றங்கள் நோக்கி பயணிக்கும் அணிகள்!!

 

நாளை நான்காவது ஒருநாள் போட்டி: மாற்றங்கள் நோக்கி பயணிக்கும் அணிகள்!!

இந்தியா – நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

-குமரன் குமணன்

வெலிங்டன்: இந்தியா – நியூசிலாந்து இடையேயான நான்காவது ஒருநாள் போட்டி நாளை நடைபெறவுள்ளது.

நியூசிலாந்து – இந்திய அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடரின் முதல் மூன்று போட்டிகளிலும் முறையே 8 விக்கெட் மற்றும் 90 ரன்கள் மற்றும் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை வென்றுள்ளது இந்திய அணி.

நாளை ஹாமில்டன் நகரிலுள்ள செட்டொன் பார்க் மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இந்திய அணியில் மாற்றங்கள் உண்டாகும். பயண அட்டவணையில் மீதமுள்ள ஆட்டங்களில் கோலிக்கு ஓய்வு கொடுக்கப்படுள்ளதால்,ரோகித் ஷர்மா அணித் தலைவராக பொறுப்பேற்க உள்ளார். அவர் தனது 200-வது ஒருநாள் போட்டியில் நாளை களமிறங்க உள்ளார்.

ஓய்வு கொடுக்கப்பட்ட கோலிக்கு மாற்று வீரர் என யாரையும் இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவிக்கவில்லை. ஏற்கனவே அணியுடன் இணைந்துள்ள ஷுப்மன் கில், நாளை சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவது இதன் மூலம் கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அப்படி நடக்காவிட்டால் ராயுடு மூன்றாம் நிலையில் இறங்குவார்.

கடந்த போட்டியில் விளையாடாத தோனி தற்போது வலை பயிற்சியில் ஈடுபடும் நிலையை எட்டி விட்டதால் அவர் அணிக்கு திரும்புவார். அவர் நான்காவது அல்லது ஐந்தாம் நிலையில் வரக்கூடும். இந்த மாற்றம் மட்டுமின்றி முகமது ஷமிக்கு ஒய்வு அளிக்கப்பட்டு அவருக்கு பதில் சிராஜ் களமிறக்கப்படலாம் என தெரிகிறது.

தொடரை இழந்துவிட்ட நியூசிலாந்து அணியை பொறுத்தவரை ஈஷ் சோதி மற்றும் டக் பிரேஸ்வெல் ஆகியோர் நீக்கப்பட்டு அவர்களுக்கு மாற்றாக டோட் ஆஸ்டில் மற்றும் ஜேம்ஸ் நீஷம் சேர்க்கப்பட்டு உள்ளனர்.

நாளைய போட்டி நடைபெறவுள்ள மைதானத்தில் இதற்கு முன் நடந்த மூன்று போட்டிகளில் 260-க்கும் 290-க்கும் இடைபட்ட இலக்குகள் வெற்றிகரமாக துரத்தப்பட்டுள்ளன. இந்த போட்டிகள் அனைத்திலும் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு உள்ளனர். அவற்றில் ஒன்றில் மிட்செல் சானட்னர் தொடக்க பந்துவீச்சாளராக கூட இருந்துள்ளார்.

இரு அணிகளிலும் மாற்றங்கள் நிகழ்வுள்ள நிலையில் எந்த அணிக்கு எந்த மாற்றம் எவ்வாறு கை கொடுக்கும் என்பதை அறிய நாளை வரை காத்திருக்க வேண்டும்.