நாளை தொடங்குகிறது சிட்னி டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

 

நாளை தொடங்குகிறது சிட்னி டெஸ்ட்: தொடரை கைப்பற்றுமா இந்தியா?

இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது

-குமரன் குமணன்

சிட்னி: இந்தியா – ஆஸ்திரேலிய அணிகள் இடையேயான நான்காவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தொடரை இந்திய அணி கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. சமனில் முடிந்த 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரை அடுத்து, தொடங்கிய 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டியில் இந்தியா 31ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. பெர்த் நகரில் நடைபெற்ற இரண்டாம் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 146 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

மெல்போர்னில் நடைபெற்ற மூன்றாவது போட்டியில் இந்திய அணி 137 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. மெல்போர்னில் 37 ஆண்டுகளுக்கு பின் வென்ற இந்தியா, ஒரு பாக்ஸிங் டே போட்டியில் அதன் முதல் வெற்றியையும் பதிவு செய்தது.

ஏற்கனவெ கடந்த ஆண்டு இந்தியாவில் நடந்ந டெஸ்ட் தொடரில் வென்றிருந்த இந்திய அணி, தற்போது நடந்து வரும் தொடரில் முன்னிலை பெற்றதன் மூலம் “பார்டர் -கவாஸ்கர் ” கோப்பையை தக்க வைத்துக் கொண்டுள்ளது. சிட்னி டெஸ்ட் போட்டியின் முடிவு இந்த நிலையை மாற்றாது.

அதே சமயத்தில் நாளை அதிகாலை 5 மணிக்கு தொடங்கும் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றால், தொடரை வெல்வதோடு மட்டுமல்லாமல் சிட்னி நகரில் 1978-ஆம் ஆண்டுக்கு பிறகு வெற்றியை பதிவு செய்யும். இதுவரை சிட்னியில் 11 போட்டிகளில் விளையாடியுள்ள இந்திய அணி ஒரு போட்டியில் வெற்றியும் ஜந்தி்ல் தோல்வியும் ஜந்தில் டிராவும் கண்டுள்ளது. 

1977-78 காலகட்டத்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட தொடரில் மெல்போர்ன் மற்றும் சிட்னி நகர டெஸ்ட் போட்டிகளில் வெற்றி பெற்றிருந்தது. அதன் பிறகு இந்திய அணி ஆஸ்திரேலியாவில் ஒரு தொடரில் இரு போட்டிகளில் வெற்றி பெற்றிருப்பது தற்போதைய தொடரில் தான்.

ஆஸ்திரேலிய அணியில் இந்த போட்டிக்காக லெக் ஸ்பின் வீசக்கூடிய ஆல் ரவுண்டரான 24 வயது மார்னஸ் லபுஸாஞ்சே சேர்க்கப்பட்டுள்ளார். மகள் பிறந்த்தையடுத்து ரோகித் ஷர்மா மும்பை சென்றுவிட்டார். ஒருநாள் தொடர் தொடங்கும் முன் அவர் அணியுடன் மீண்டும் இணைந்து கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளை தொடங்கவுள்ள போட்டிக்கான 13 பேர் கொண்ட உத்தேச அணியில் பண்ட்யாவின் பெயர் இடம் பெறவில்லை. கடந்த போட்டியில் ஆடாத ராகுலின் பெயர் மீண்டும் சேர்க்கப்பட்டுள்ளது. அஷ்வின் சேர்க்கப்படுவாரா இல்லையா என்பது போட்டி தொடங்கும் முன்னர் தான் தெரியவரும். கடந்த 3 போட்டிகளிலும் விளையாடி 11 விக்கெட்டுகளை கைப்பற்றிய இஷாந்த் ஷர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதில் உமேஷ் யாதவ் சேர்க்கப்பட்டுள்ளார்.

இதுவரையிலான கிரிக்கெட் வரலாற்றில் எந்த ஆசிய அணியும் ஆஸ்திரேலியாவில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது இல்லை. இப்போது இந்தியாவுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது. அதுவும் முன்னிலையோடு, அதாவது போட்டியை டிரா செய்தலே தொடரை வெல்ல போதுமானது என்ற சூழல் தற்போது நிலவுகிறது.

சிட்னியில் 1882-ஆம் ஆண்டு முதல் டெஸ்ட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. ஆஸ்திரேலிய அணி இங்கு 106 டெஸ்ட்களில் விளையாடி அவற்றில் 59-ல் வெற்றியும் 28-ல் தோல்வியும் 19-ல் டிராவும் கண்டுள்ளது. இங்கு விளையாடிய கடைசி 24 போட்டிகளில் இரண்டில் மட்டுமே தோற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.